அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் சாவு; விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள்
அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் சாவு; விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் இறந்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 நாள்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மருத்துவமனை தரப்பு இதனை மறுத்துள்ளது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் வரை பணம் செலுத்தாமல் நிலுவை வைத்ததால், அந்த நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 30 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.

இதில் 17 குழந்தைகள் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தைகளாகும். மூளை பாதிப்பு சிகிச்சை பிரிவில் 5 குழந்தைகளும், பொதுப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன. திங்கள்கிழமை பிற்பகலில் இருந்து புதன்கிழமை பிற்பகல் வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த மருத்துவமனை மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கூறப்படுவதை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த உயிரிழப்பு தொடர்பாக ஊடகங்கள் கூறுவது சரியான தகவல் அல்ல. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும்' என்றார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், '30 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் குழந்தைகள் உயிரிழக்கவில்லை. மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை என்றும், பக்கத்து மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 30 குழந்தைகளில் 7 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்க பதிவில், 30 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com