பெரு நிறுவனங்களின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை: ஜேட்லி விளக்கம்

பெரு நிறுவனங்கள் பெற்ற கடனில் ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி அரசை
பெரு நிறுவனங்களின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை: ஜேட்லி விளக்கம்

பெரு நிறுவனங்கள் பெற்ற கடனில் ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி அரசை விமர்சிப்பவர்கள் முதலில் உண்மை நிலை அறிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றபோது காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்திர சிங் ஹூடா துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். பெரு நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயக் கடன்களை ரத்து செய்ய முன்வராதது ஏன்? என்று அவர் கேட்டார். அதற்கு ஜேட்லி அளித்த பதில்:
பொதுவாக கடனை ரத்து செய்வதும், தள்ளுபடி செய்வதும் சம்பந்தப்பட்ட வங்கிகள் எடுக்கும் நிர்வாகரீதியான முடிவாகும். கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து விவசாயக் கடன்களை ரத்து செய்யும் திட்டங்கள் எதையும் அரசு முன்னெடுக்கவில்லை. அதேவேளையில், பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவரை அவ்வாறு ஒரு ரூபாய் கூட அரசு கடன் தள்ளுபடி செய்யவில்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதற்கு முன்பாக உண்மை நிலவரத்தை அறிந்துகொண்டு பேச வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் வேளாண் கடன் மதிப்பு ரூ.62,307 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, போலி நிறுவனங்கள் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜேட்லி, அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com