காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை உருவாக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும்: அமித் ஷா

காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை உருவாக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
பெங்களூருக்கு சனிக்கிழமை வருகைதந்த போது, பாஜகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்களை நோக்கி கையசைக்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா. உடன், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள்
பெங்களூருக்கு சனிக்கிழமை வருகைதந்த போது, பாஜகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்களை நோக்கி கையசைக்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா. உடன், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள்

காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை உருவாக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

மூன்றுநாள் பயணமாக பெங்களூருக்கு சனிக்கிழமை வருகைதந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, விமான நிலையத்துக்கு அருகே உள்ள நாதஹள்ளி சுங்கச் சாவடியில் உற்சாக வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்களிடையே அவர் பேசியது:
கர்நாடக சட்டப்பேரவைக்கு 2018}ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களை போல உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் பாஜகவின் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்.
கர்நாடகத்தில் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக கர்நாடகத்தில் நடந்துவரும் காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் தயாராகக் காத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக ஆட்சியைக் கொண்டுவர துடிப்புடன் பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை உருவாக்க தொண்டர்கள் இரவு பகலாக உழைக்க வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் கர்நாடக சட்டப்பேரவையில் 150 இடங்களில் வென்று, பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். பிரதமர் மோடியின் வெற்றிப்பயணம் தென்னகத்திலும் தொடர பாஜக தொண்டர்கள் அல்லும் பகலும் அயராமல் உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் கர்நாடகத்தில் எடியூரப்பாவின் தலைமையில் பாஜகவின் ஆட்சி நடக்கவிருக்கிறது. எனவே, அவரை எதிர்கால முதல்வர் எடியூரப்பா என்றே அழைக்க விரும்புகிறேன். கட்சிக்குள் கருத்து வேறுபாடு எதுவுமில்லாமல், எவ்வித தொய்வும் இல்லாமல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர கூட்டாக பாடுபட வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேசியது:
பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற அமித் ஷா, கர்நாடகத்துக்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். எனவே, அவரது வழிகாட்டுதலில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களில் வென்று காட்டுவோம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெüடா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, கட்சியின் முன்னணியினர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நூலகம் திறப்பு: வரவேற்பைத் தொடர்ந்து, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அமித் ஷா, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நானாஜி தேஷ்முக் நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நடந்த கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல அமைப்புச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தலைவர்கள், செயலர்கள், அணித் தலைவர்கள், அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து, பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, ஐந்து நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற அறிவுஜீவிகள், முன்னோடிகள், சாதனையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com