காஷ்மீரின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது பாகிஸ்தான்: தேசிய மாநாட்டு கட்சி குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தவருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டதன் மூலம் மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தவருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டதன் மூலம் மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக பாகிஸ்தான் மீது தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜாக்ரியா, கடந்த வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அதில், "ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முயற்சிப்பதன் மூலம் அந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள முஸ்லிம்களை சிறுபான்மையினராக ஆக்குவதற்கு இந்திய அரசு முயற்சிக்கிறது' என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக பாகிஸ்தான் மீது தேசிய மாநாட்டு கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தேவிந்தர் சிங் ராணா, ஜம்முவில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
35ஏ சட்டப் பிரிவு விவகாரத்தை, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னையாக மாற்றும் சதித் திட்டத்தின் ஒருபகுதியாகவே பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கருதுகிறோம்.
அந்த சட்டப் பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு கவசம் போன்றது.
இதுகுறித்து, மாநில மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர்
ஒமர் அப்துல்லா தலைமையில் வரும் 14-ஆம் தேதி ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறோம்.
35ஏ சட்டப் பிரிவு தொடர வேண்டுமா? என்பதை மாநில மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் முன்வைக்கும் வாதங்கள் வலுவானதாக இல்லை.
35ஏ சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டால், அது மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வர்த்தகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்புகள் ஏற்படும் என்றார் அவர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகின்றன.
அந்த மாநிலத்தில் வெளிநபர்கள் சொத்துகள் வாங்குவது, அரசு பணியில் சேருவது உள்ளிட்டவற்றை, இந்த சட்டப் பிரிவுகள் தடை செய்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com