வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

"மோடி அரசு, வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.
வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

"மோடி அரசு, வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

கர்நாடக மாநிலத்தில் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் "ஹைதராபாத் } கர்நாடக பிராந்தியத்துக்கு', காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியமைக்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, மாநில காங்கிரஸ் சார்பில் ராய்ச்சூரில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அதில், ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
விவசாயிகள் தற்கொலை: மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
மத்தியில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம், விவசாயிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறோம். ஏனெனில், விவசாயிகளால்தான் நாட்டை வலுவானதாக மாற்ற முடியும். விவசாயிகள் வலுவிழந்துவிட்டால், நாடும் வலுவிழக்கும் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருந்தோம்.
பாஜகவின் எண்ணம் வேறு: ஏழைகளுக்கும், சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களுக்கும் உதவுவதில், மகாத்மா காந்தி காட்டிய வழிகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணமோ வேறு. வசதி படைத்தவர்களுக்கும் சமூகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கும் உதவினால்தான், நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
பயிர்க் கடன் விவகாரம்: பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது அரசின் கொள்கையல்ல என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். மற்றொரு பாஜக மூத்த தலைவர், பயிர்க் கடன்களை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகளை சோம்பேறிகளாக்க விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்தார்.
நாட்டிலேயே மிகப் பெரும் செல்வந்தர்களாக இருக்கும் 10 தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தீர்களே, அவர்கள் சோம்பேறி ஆகமாட்டார்களா?
வெற்று வாக்குறுதி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஆண்டுதோறும் 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2 முதல் 3 சதவீதம் அளவுக்கே உயர்த்தப்படுகிறது.
வெறுமனே பேசுவதையும், வெற்று வாக்குறுதிகளை அளிப்பதையுமே மோடி அரசு செய்து வருகிறது.
சொல்வதை செய்துகாட்டுவோம்: இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் குறித்து பாஜகவினர் பெரிதாக பேசுகிறார்கள். ஆனால், அந்த திட்டத்தின்கீழ் ஒரு தொழிற்சாலையாவது தொடங்கப்பட்டதா? ஹைதராபாத்}கர்நாடக பிராந்தியத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது? ஆனால், முதல்வர் சித்தராமையாவின் நடவடிக்கைகளால் இப்பகுதியில் 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சொல்வதை செய்துகாட்டும் திறன் காங்கிரஸýக்கே உள்ளது என்பதை மக்கள் அறிவர்.
காங்கிரஸால் மட்டுமே தங்களுக்கு உதவ முடியும் என்பதை விவசாயிகளும், இளைஞர்களும் தற்போது உணர்ந்துள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பாதிப்பு: கடந்த ஆண்டு நவம்பர் 8}ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு என்ன காரணத்தினாலோ ஒரு யோசனை வந்துள்ளது. உடனே தொலைக்காட்சியில் தோன்றிய அவர், மக்களிடமிருக்கும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை தடை செய்யப் போவதாக கூறினார். இந்த நடவடிக்கையால், சிறு வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பெண்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்புகளை மக்கள் இன்னமும் மறக்கவில்லை.
கர்நாடக காங்கிரஸாருக்கு அறிவுரை: கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களின் நலனுக்காக மாநில காங்கிரஸ் அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, காங்கிரஸ் தொண்டர்கள் ஒற்றுமையுடன் உழைத்தால், அடுத்த தேர்தலிலும் நமக்கே வெற்றி கிடைக்கும் என்றார் ராகுல் காந்தி.
இந்த விழாவில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com