60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்திருக்க உ.பி. அரசு அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தங்களிடம் போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தங்களிடம் போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த மாநிலத்தில் கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரியில் 30 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரப் பிரதேச அரசின் மருத்துவக் கல்வித் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், தங்களிடம் போதுமான எண்ணிக்கையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிப்பவர்களுக்கு, நிலுவை இல்லாமல் முழுத் தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் பல்கலைக்கழகங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வித் துறை தலைமைச் செயலதிகாரி அனிதா பட்நாகர் ஜெயின் கூறியதாவது:
கோரக்பூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆக்சிஜன்சிலிண்டர்களின் இருப்பை சரிபார்க்கும்படி மாநிலத்தின் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், 12 முக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நாங்கள் எழுத்து முலம் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
மேலும், ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருந்தால், அதனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம்.
மருந்துகள் மற்றும் ஆக்ஸின் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளும்படியும், இதில் தவறு நடந்தால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ஒவ்வொரு கல்லூரியின் முதல்வர்களிடமும் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளோம்.
ஆக்சிஜனின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அடிக்கடி நேரடியாகச் சோதனை செய்யும்படி முதல்வர்களிடம் கூறியுள்ளோம் என்றார் அவர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரிலுள்ள பாபா ராகவ தாஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் குறுகிய காலக்கட்டத்தில் 30 குழந்தைகள் இறந்தன.
அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்த நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்படாததால், அவர்கள் சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அந்தக் குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுவதை முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்தார். இந்தச் சூழலில், சிலிண்டர் மற்றும் மருந்து இருப்புகளைச் சரிபார்த்துக் கொள்ளும்படி கல்லூரிகளை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com