வாடகைத் தாய் மசோதாவில் 5 ஆண்டு காத்திருப்புக் காலம் நியாயமற்றது

வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதுதொடர்பான வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று அந்த மசோதாவை
வாடகைத் தாய் மசோதாவில் 5 ஆண்டு காத்திருப்புக் காலம் நியாயமற்றது

வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதுதொடர்பான வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று அந்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் குழு கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது அறிக்கையில் அந்தக் குழு தெரிவித்துள்ளதாவது:
வாடகைத் தாய் முறையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தம்பதியர் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பது, தன்னிச்சையான, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒரு விதிமுறையாகும்.
தற்போதைய சூழலில், வயதில் 30-களின் பிற்பகுதியிலும், 40-களிலும் இருப்பவர்களுக்கு நடைபெறும் திருமணங்கள்தான் தாமதத் திருமணங்கள் என்றாகிவிட்டது.
இந்த வயதுக்குப் பிறகு அவர்களை ஐந்து ஆண்டுகள் காத்திருக்கச் செய்தால், கருவை உருவாக்கக் கூடிய அவர்களது உயிரணுக்களின் திறன் குன்றிப் போகும் அபாயம் உள்ளது.
வாடகைத் தாயை நாடுவதற்கு 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று தம்பதியரை வற்புறுத்துவது, அவர்களது குழந்தை பெறுவதற்கான அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.
மேலும், தனது விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தனி மனித உரிமையிலும் அந்த விதிமுறை தலையிடுகிறது.
கருப்பையே முற்றிலும் இல்லாதவர்கள், புற்று நோய் போன்ற காரணங்களால் கருப்பை பாதிக்கப்பட்டவர்கள் கூட, ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்று மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது தேவையற்ற ஒன்று. அவர்களுக்கு வேறு வழியே இல்லாதபோது, வாடகைத் தாயை நாடுவதற்காக அவர்களைக் காத்திருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.
"மலட்டுத் தன்மை' என்ற பதத்துக்கு உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள வரையறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் நாடாளுமன்றக் குழு குறிப்பிடப்பட்டுள்ளது.
"கருத்தடை சாதனங்களில்லாமல் தம்பதியர் 12 மாதங்களுக்கும் மேல் இணைசேர்ந்த பிறகும், ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியவில்லை என்றால் அவரை தாய்மையடைய இயலாதவராகக் கருதலாம்' என்று உலக சுகாதார அமைப்பு வரையறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com