தனி மாநிலக் கோரிக்கையில் சமரசம் கிடையாது: ஜி.ஜே.எம். உறுதி

கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சித் தலைவர் விமல் குருங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனி மாநிலக் கோரிக்கையில் சமரசம் கிடையாது: ஜி.ஜே.எம். உறுதி

கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சித் தலைவர் விமல் குருங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் டார்ஜீலிங் உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள் அடங்கிய கோர்க்காலாந்து பிராந்தியத்தை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி, ஜிஜேஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றன.
மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கோர்க்கா அமைப்புகள் அழைப்பு விடுத்ததன் பேரில், டார்ஜிலிங்கில் கடந்த 62 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், டார்ஜீலிங்கில் ஜிஜேஎம் கட்சி சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விமல் குருங், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நமது உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்ததாலேயே இன்று தனி மாநிலம் வேண்டும் என்று நாம் கோருகிறோம். கோர்க்காலாந்து தனி மாநிலம் என்பது நமது நீண்டகால கனவு. இந்தக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
கோர்க்காலாந்து தனி மாநிலம் அமைய வேண்டும் என்பதற்காக டார்ஜீலிங்கில் 60 நாள்களுக்கும் மேலாக முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனி மாநிலம் அமையும் வரை நமது போராட்டத்திலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றார் விமல் குருங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com