பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றமளிக்கிறது: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றமளிக்கிறது; கவனத்தை ஈர்க்கும் வகையில் அதில் எதுவுமில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றமளிக்கிறது: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றமளிக்கிறது; கவனத்தை ஈர்க்கும் வகையில் அதில் எதுவுமில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமரின் சுதந்திர தின உரையானது, ஏமாற்றத்தை தருகிறது. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை இயற்கை பேரழிவுகளுடன் சேர்த்து பிரதமர் பேசினார்.
அந்தச் சம்பவத்துக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுக்காததையே, இது வெளிப்படுத்துகிறது.
மத்தியில் அவரது அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள், விவசாயிகள், நலிந்த பிரிவினருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோல்வியடைந்தது குறித்து, பிரதமர் பேச வேண்டிய நேரம் இதுவாகும்.
காஷ்மீர் மக்களை அவர் அரவணைத்து செல்வதை நாங்கள் தடுத்து நிறுத்தப் போவதில்லை. அதேநேரத்தில், அனைத்துப் பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை அவர் ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் வன்முறை மற்றும் பீதியை ஏற்படுத்தி, மக்களிடையே பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கி வருவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் எந்த சக்தி தடுக்கிறது?
அத்தகைய செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? ஏன் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை?
ஆண்டுதோறும் தலா 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், அதுகுறித்து தற்போது அவர் பேசுவதில்லை. ஆனால் ஜிஎஸ்டி பயன் குறித்தும், கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் அவர் பேசுகிறார்.
உயர்மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு முடிவின் காரணமாக, ரிசர்வ் வங்கி பெட்டகத்துக்கு திருப்பி வந்த கருப்புப் பணத்தின் மதிப்பு குறித்து அவரது அரசு ஏன் தகவல் வெளியிடவில்லை? ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறுகிறார்.
ஆனால், அவரது ஆட்சி மத்தியில் அமைந்து 3 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், லோக் பால் அமைப்பை ஏன் நியமிக்கவில்லை?
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள், சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர்கள், நவீன மற்றும் சுய சார்பு கொண்ட இந்தியாவை கட்டமைக்க அடித்தளமிட்டவர்கள் குறித்து பேசவில்லை என்றார் ஆனந்த் சர்மா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியபோது, மோடியின் உரையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதுவும் இல்லை என்றார். அவர் மேலும் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்துக்கு ராணுவம் மூலம் தீர்வு காண்பதில் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், பிரதமரோ, காஷ்மீர் மக்களை அரவணைத்துச் செல்வது குறித்து பேசுகிறார். அவர் தெரிவித்ததில் வைத்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
பிரதமர் தனது உரையில், மத நம்பிக்கை அடிப்படையில் நடத்தப்படும் வன்முறையை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில், பிரதமர் மோடி முதலில் ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்களை மதவாத தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்தும்படி கூற வேண்டும் என்றார் டி.ராஜா.
தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், காஷ்மீர் பிரச்னைக்கு துப்பாக்கித் தோட்டாக்களாலும், வன்முறையினாலும் தீர்வு காண முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் அவர், 'அவரது உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்து, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் ஆகிய இருதரப்புகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com