இளம் தொழில் முனைவோருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 212 தொழில் முனைவோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 212 தொழில் முனைவோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
தில்லியில் மத்திய கொள்கைக் குழு (நிதி ஆயோக்) சார்பில், 'சவால்களைச் சந்திக்கும் சாம்பியன்ஸ்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய கொள்கைக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
புதிய இந்தியா-2022, மின்யுக இந்தியா, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, மென்திறன் ஊக்குவிப்பு, நிலையான எதிர்கால வளர்ச்சி ஆகிய 6 கருப்பொருள்களில், இளம் தொழில் முனைவோர்கள், தங்களது திட்டங்களை புதன்கிழமை விவரிக்கத் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை அவர்கள் வியாழக்கிழமை சந்தித்து தங்களது செயல் திட்டங்களை விளக்குவார்கள். பின்னர், அந்தத் திட்டங்கள், பிரதமரின் 15 ஆண்டுகால தொலைநோக்குத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
இதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில், 180 இளம் தலைமைச் செயலக அதிகாரிகள், வரும் 21, 22-ஆம் தேதிகளில் 6 தலைப்புகளில் தங்களது திட்டங்களை விரிவாக எடுத்துரைக்கவுள்ளனர்.
புதிய இந்தியா-2022, இந்தியாவில் தயாரிப்போம், நாளைய நகரங்கள், உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, நிதித் துறையில் சீர்திருத்தம் ஆகிய கருப்பொருள்களின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் இருக்கும்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை, வரும் 22-ஆம் தேதி சந்தித்து, அவர்கள் தங்களது திட்டங்களைத் தெரிவிப்பார்கள்.
நாடு முழுவதும் இருந்து சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், இளம் தொழில் முனைவோரும், இளம் தலைமைச் செயலதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதுமையான சிந்தனைகளை ஒருங்கிணைத்து கொள்கைகளை உருவாக்குவதற்காக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com