'புளூ வேல்' விளையாட்டால் கேரளத்தில் மேலும் ஒருவர் தற்கொலை

'புளூ வேல்' இணையதள விளையாட்டால் கேரளத்தில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இப்போது தெரியவந்துள்ளது.

'புளூ வேல்' இணையதள விளையாட்டால் கேரளத்தில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இப்போது தெரியவந்துள்ளது.
பங்கேற்பவர்களைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அபாயகரமான 'புளூ வேல்' இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
50 நாள்கள் வரை நடைபெறும் இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களுக்குச் சில சவால்கள் கொடுக்கப்படுகிறது. முதலில் எளிதான சவால்கள் இருக்கும். பின்னர் டிக்கெட் இல்லாமல் பஸ், ரயிலில் பயணிப்பது என்று சவால் வலுக்கும். பின்னர், தங்கள் கைகளில் கத்தியால் கீறிக் கொள்வது உள்ளிட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடுமாறு பணிக்கப்படுகின்றனர். அதன் இறுதியில் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது. அதை ஏற்று வெளிநாடுகளில் சுமார் 130 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நம் நாட்டிலும் 'புளூவேல்' விளையாட்டு சிறுவர்களை ஈர்க்கத் தொடங்கியது. அண்மையில், மும்பையில் ஒரு 14 வயது சிறுவன் 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளி மாணவரும், மணிப்பூரில் ஒரு சிறுவனும் தற்கொலைசெய்து கொண்டதற்கு இந்த விளையாட்டுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
கேரளத்தின் திருவனந்தபுரம் அருகில் உள்ள விலாபிலசாலா பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற 16 வயது மாணவர் கடந்த மாதம் 26-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரும் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டதால்தான் இந்த நிலைக்கு ஆளானார்.
இந்நிலையில், கடந்த மாதம் கண்ணூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. சாவந்த் (22) என்ற அந்த இளைஞரின் தாயார் இது தொடர்பாக கூறியதாவது:
ஐடிஐ-யில் படித்து வந்த சாவந்த் இரவு முழுவதும் இணையதள விளையாட்டுகளில் ஈடுபட்டு விட்டு, அதிகாலையில்தான் தூங்கச் செல்வான். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது கையில் பிளேடால் அறுத்துக் கொண்டான்.
மனஅழுத்தத்தால் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று நினைத்து மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் சென்றோம். திடீரென ஒருநாள் தலச்சேரி கடல் பாலத்தின் முனையில் அமர்ந்திருந்த அவனை போலீஸார் மீட்டனர். இரவு நேரத்தில் திகில் படங்களையும் பார்த்து வந்தான். இந்நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டார் என்றார்.
கேரள முதல்வர் வரவேற்பு: இதனிடையே, தனது கோரிக்கையை ஏற்று 'புளூ வேல்' இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com