60 குழந்தைகள் உயிரிழப்பு: இரு மருத்துவர்கள், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனம் மீது விசாரணைக் குழு குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் நான்கு நாள்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இரு மருத்துவர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் நிறுவனம்


உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் நான்கு நாள்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இரு மருத்துவர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் நிறுவனம் மீது கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் அளித்த விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது குறித்தும், அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விசாரணை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 குழந்தைகள் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 4 நாள்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர்களை அளிக்கும் லக்னெளவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் வரை மருத்துவமனை நிர்வாகம் பாக்கி வைத்ததால் அந்த நிறுவனம் சிலிண்டர் வழங்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 நபர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மருத்துவமனையில் மயக்க மருத்துப் பிரிவின் தலைவர் மருத்துவர் சதீஷ் குமார் தனது கடமையில் இருந்து தவறியுள்ளார் என்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது.
இது தவிர மருந்துகள் பிரிவின் தலைவர் மருத்துவர் ஜி.ஜெய்ஸ்வால், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் தங்களது பணியில் சரியாக செயல்படவில்லை.
அதே நேரத்தில் லக்னெளவைச் சேர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனமும், முறையாக சிலிண்டர்களை விநியோகிக்காமல் இருந்துள்ளது. அந்த நிறுவனமும் தவறுக்கு பொறுப்பாகிறது. ஏனெனில், பல உயிர்களைக் காக்கும் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து அந்த நிறுவனம் செயல்படவில்லை.
மூளை வீக்க நோய் பிரிவில் மொத்தம் 100 படுக்கைகள் உள்ளன. இதன் தலைவராக இருந்த மருத்துவர் கஃபீல் கான், அந்த வார்டில் குளிர்சாதன இயந்திரம் வேலை செய்யவில்லை என்பதை மருத்துவர் சதீஸ் குமாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அது சரி செய்யப்படவில்லை.
மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 11-ஆம் தேதியில் இருந்து சதீஸ் குமார் மருத்துவமனைக்கு வரவில்லை. ஆக்சிஜன் விநியோகத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடம்தான் உள்ளது. எனவே, அவர் தவறு செய்துள்ளதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது.
மருத்துவர்கள் சதீஸ் குமார், ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கும்தான் மருத்துவமனைக்கு எத்தனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகின்றன. அவற்றின் இருப்பு எவ்வளவு என்ற கணக்கைப் பராமரிக்கும் பொறுப்பும் உண்டு. ஆனால், அவர்கள் இதனைச் சரிவர செய்யவில்லை. மேலும், அந்த விவரங்கள் பின்னர் திருத்தி எழுதப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா கடந்த 10-ஆம் தேதியும், மருத்துவர் சதீஸ் குமார் கடந்த 11-ஆம் தேதியும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியூருக்கு சென்றுள்ளனர். அவர் வெளியூர் செல்வதற்கு முன்பு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்திருந்தால் இவ்வளவு மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்படும் என்ற விவரம் அவர்கள் இருவருக்கும்தான் தெரியும். மருத்துவமனையை முறையாகப் பராமரிப்பது, செலுத்த வேண்டிய தொகைகளை சரியான நேரத்தில் செலுத்துவது போன்ற பணிகளில் மிஸ்ரா உரிய கவனம் செலுத்தவில்லை.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதற்கு மட்டுமே பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், 60 குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதையும், அதற்கு யார் பொறுப்பும் என்பதும் விசாரணை அறிக்கையில் கூறப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com