ஊழலற்ற புதிய தேசம் மலர ஒத்துழையுங்கள்!: நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

ஊழலற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அரசின் பங்களிப்பு மட்டும் போதாது; நாட்டு மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் மத்திய கொள்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இளம் தொழில்முனைவோர்களுடனான கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி.
தில்லியில் மத்திய கொள்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இளம் தொழில்முனைவோர்களுடனான கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி.

ஊழலற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அரசின் பங்களிப்பு மட்டும் போதாது; நாட்டு மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசம் முழுவதும் புரையோடியுள்ள லஞ்ச லாவண்யங்களை வேரறுக்க மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக மாற்றத்துக்கு வித்திட்ட சாதனையாளர்கள் என்ற தலைப்பில் இளம் தொழில்முனைவோர்களை கெளரவிக்கும் விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களைச் சந்தித்து உரையாடினார். நிறைவாக விழாவில் அவர் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக குரூப்-3 மற்றும் குரூப்-4 பணியிடங்களுக்காக நடத்தப்பட்டு வந்த நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் சம்பாதித்து வந்த இடைத்தரகர்களுக்கே வேலை இல்லாமல் போய்விட்டது.
அதைக் காரணமாக வைத்துதான் அவர்கள் அனைவரும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் நடைமுறையிலும் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்திருக்கிறது.
முந்தைய காலங்களில் அமைச்சர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல. சாமானியர்கள் கூட பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களைப் பரிந்துரைக்க முடியும்.
இவ்வாறாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், புதிய தேசத்தை கட்டமைக்க இது மட்டும் போதாது. அரசுடன் இணைந்து நாட்டு மக்களும் செயல்பட்டால்தான் அந்த இலக்கை வென்றெடுக்க முடியும்.
சமூகத்தில் ஊழல் ஆழமாக வேரூரின்றி இருப்பது துரதிருஷ்டவசமானது. அந்த நிலையை மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதுவரை ஊழலை அகற்ற இயலாது.
சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்றார் மோடி.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com