குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு?

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் மூண்ட கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனு மீது அந்த
குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு?

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் மூண்ட கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனு மீது அந்த மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி மூண்ட கலவரத்தில் குல்பர்க் சொசைட்டி எனுமிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 68 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கலவரத்தில், அப்போது குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), மோடி உள்ளிட்டோருக்கு அதில் தொடர்பில்லை என்று கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாஹியா ஜாப்ரி வழக்குத் தொடுத்தார். அதில், நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சதி குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஜாஹியா ஜாப்ரி வலியுறுத்தியிருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஜாஹியா ஜாப்ரியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜாஹியா ஜாப்ரி மேல்முறையீடு மனு தொடுத்திருந்தார். இதேபோல், சமூக சேவகர் தீஸ்டா செதால்வாட்டின் "குடிமக்களுக்கு நீதி மற்றும் அமைதி' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பும் மனு தொடுத்தது. அந்த மனுக்களில், கலவரம் தொடர்பாக புதிதாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அதன்மீது கடந்த 9-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி சோனியா கோஹானி அறிவித்திருந்தார். எனினும், தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) ஒத்திவைப்பதாக பின்னர் அவர் அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் தனது தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீது விசாரணை நடைபெற்றபோது, சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், "இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது; அப்போது இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜாஹியா ஜாப்ரியின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் தரப்பில், "விசாரணையை முடிப்பது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை விசாரணை நீதிமன்ற நீதிபதி முழுவதும் ஏற்றுக் கொண்டார்; அதை நிராகரிப்பது; மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடுவது போன்ற பிற உபாயங்களை அவர் ஆலோசிக்கவில்லை' என்று குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com