பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 90 லட்சம் விவசாயிகள் பயன்: பிரதமர் அலுவலகம் தகவல்

நாடு முழுவதும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அலுவலகம், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வேளாண் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், குறிப்பாக, மண் வள பரிசோதனை அட்டை, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வேளாண் அமைச்சகம், மத்திய கொள்கைக் குழு (நிதி ஆயோக்), பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு காரீஃப் பருவத்திலும் (ஜூலை- அக்டோபர்), 2016-17-ஆம் ஆண்டு ராபி பருவத்திலும் (அக்டோபர்-மார்ச்), 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.7,700 கோடி வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள், செயற்கைக்கோள் வாயிலாகப் பெறப்படும் தகவல்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதால், பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கையை எளிதில் ஆய்வு செய்ய முடிந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மண் வள பரிசோதனை அட்டைத் திட்டத்தைப் பொருத்தவரை, 16 மாநிலங்களுக்கு மண் வள பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாநிலங்களுக்கு விரைவில் மண் வள பரிசோதனை அட்டை வழங்கப்பட்டுவிடும் என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது, மண் வள பரிசோதனைகளை வெவ்வேறு ஆய்வகங்களில் நடத்தி, அதன் முடிவுகளுக்கு ஏற்ப, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
மேலும், விவசாயிகள் புரிந்துகொண்டு பதிலளிக்கும் வகையில், பிராந்திய மொழிகளில் மண் வள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com