மாநிலங்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம், அகமது படேலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேரின் வாக்குகளைச் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுவை ரத்து செய்யக் கோரி பாஜக

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேரின் வாக்குகளைச் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுவை ரத்து செய்யக் கோரி பாஜக வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், காங்கிரஸ் பிரமுகர் அகமது படேலுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத்தில் இருந்து மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸில் இருந்து விலகி வந்த பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் போட்டியிட்டார்.
இத்தேர்தலில், மேற்கண்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், பாஜக மூன்று வேட்பாளர்களை நிறுத்தியதால் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அணிமாறி, பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டதால் வழக்கத்துக்கு மாறாக, இந்த மாநிலங்களவைத் தேர்தலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
வாக்குப்பதிவு நாளான 8-ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களான ராகவ்ஜி படேலும், போலாபாய் படேலும் வாக்களிப்பதற்கு முன் தங்கள் வாக்குச்சீட்டுகளை பாஜகவின் பிரதிநிதிகளிடம் காட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
மாநிலங்களவைத் தேர்தல் விதிகளின்படி, ஒவ்வொரு எம்எல்ஏவும் தங்கள் கட்சியின் பிரதிநிதிகளிடம் மட்டுமே வாக்குச்சீட்டைக் காட்ட முடியும். அதற்கு மாறாக, மாற்றுக்கட்சி (பாஜக) பிரதிநிதிகளிடம் வாக்குச்சீட்டைக் காட்டிய அந்த இரண்டு எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது.
இந்தக் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், மேற்கண்ட இரு எம்எல்ஏக்களின் வாக்குகளும் செல்லாது என்று அறிவித்தது.
இதன் காரணமாக, ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றி பெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 44-ஆகக் குறைந்தது. அதனால், காங்கிரஸ் பிரமுகர் அகமது படேல் 44 வாக்குகள் பெற்று எளிதாக வெற்றி பெற்றார்.
அவருடன் சேர்த்து பாஜக வேட்பாளர்களான அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இத்தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத்துக்கு 38 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரின் வாக்குகளை செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யுமாறும், தம்மை வெற்ற பெற்றவராக அறிவிக்குமாறும் கோரி பல்வந்த் சிங் ராஜ்புத், குஜராத் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனு நீதிபதி பேலா திரிவேதி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வந்த் சிங் ராஜ்புத்தின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், காங்கிரஸ் பிரமுகர் அகமது படேலுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com