வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கிப் பணிகள் பாதிப்பு

வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் இன்று நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கிப் பணிகள் பாதிப்பு


சென்னை: வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் இன்று நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தைக் கைவிடுவது, வாராக்கடன் வசூலிக்க உரிய நடவடிக்கை எடுப்பது, வாடிக்கையாளர்கள் மீது அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதைத் தடைசெய்வது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்பட 9 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

தமிழகத்தை பொருத்தவரை, மாவட்டத் தலைநகர்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்தன.

சென்னையில் சுமார் 10,300 வங்கிக் கிளைகள் இன்று செயல்படவில்லை. இதனால் ரூ.7,300 கோடி மதிப்பிலான 12 லட்சம் பணப்பரிமாற்றங்கள் முடங்கியுள்ளன. மேலும், வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, வழக்கத்தை விட முன்னதாகவே ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டணப் பரிமாற்றம், கடன் அனுமதி உள்ளிட்ட பல வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை, மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் ஒரு நாளில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில், சுமார் 40 லட்சம் காசோலை மற்றும் பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிகளும் இன்று பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com