பிகார் பேரவையில் ஆர்ஜேடி இரண்டாவது நாளாக அமளி

தன்னார்வத் தொண்டு நிறுவன முறைகேடு விவகாரத்தை எழுப்பி, பிகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா
பாட்னாவில் சட்டப் பேரவை வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராப்ரி தேவி உள்ளிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள்.
பாட்னாவில் சட்டப் பேரவை வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராப்ரி தேவி உள்ளிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள்.

தன்னார்வத் தொண்டு நிறுவன முறைகேடு விவகாரத்தை எழுப்பி, பிகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி (ஆர்ஜேடி) உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர்.
பிகாரின் பாகல்பூர் நகரில் செயல்படும் ஸ்ரீஜன் என்ற தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு அரசு பணம் முறைகேடாக கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முன்னிறுத்தி, பிகார் சட்டப்பேரவையில் ஆர்ஜேடி உறுப்பினர்கள் கடந்த திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதே விவகாரத்தை முன்வைத்து பிகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ஆர்ஜேடி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர்.
பிகார் சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், ஸ்ரீஜன் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஆர்ஜேடி கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கேள்விநேரத்தை ஒத்திவைத்துவிட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த சட்டப்பேரவைத் தலைவர், ஒத்திவைப்பு தீர்மானத்தை கேள்விநேரத்தின்போது அமல்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த ஆர்ஜேடி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு தொடர்பிருப்பதால் இதற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடியும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது, ஸ்ரீஜன் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் நிதீஷ் குமார், சுஷில்குமார் மோடி ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்களையும் ஆர்ஜேடி உறுப்பினர்கள் சிலர் காண்பித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவையை மதியம் 1 மணிவரை பேரவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
பின்னர், 1 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும், இந்த விவகாரத்தை எழுப்பி ஆர்ஜேடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிகார் சட்ட மேலவையிலும் இதே விவகாரத்தை ஆர்ஜேடி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மேலவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com