முத்தலாக் சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம்

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப் பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முத்தலாக் சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம்

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப் பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அந்த நடைமுறை அரசியல் சாசனத்துக்கும், குரானின் படிப்பினைகளுக்கும் எதிரானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுகுறித்து விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 395 பக்கத் தீர்ப்பில், 'அமர்வில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளில், பெரும்பான்மையான 3 பேர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், முத்தலாக் விவாகரத்து முறை சட்டபூர்வமாக செல்லாததாக அறிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமர்வில் அங்கம் வகிக்கும் 5 நீதிபதிகளில், தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர், முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் தாற்காலிகமாகத் தடை விதிக்கவும், அதற்குள் அந்த விவாகரத்து முறைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
தலாக் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஷரியா சட்டத்துக்குள்பட்ட புதிய சட்டத்தை 6 மாதங்களுக்குள் இயற்ற மத்திய அரசு தவறினால், முத்தலாக் முறையை தொடர அனுமதிக்கலாம் என்று அவர்கள் இருவரும் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர்.
எனினும், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு. லலித் ஆகியோர் எழுதிய பெரும்பான்மைத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குரானின் படிப்பினைகளுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் முத்தலாக் உள்ளிட்ட எந்த விவாகரத்து முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது, அரசியல் சாசனத்துக்கு விரோதமாக தனி நபர்கள் கடைப்பிடிக்கும் தவறான வழிமுறையாகும். எனவே, அந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மைத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் முத்தலாக் விவாகரத்து முறை, பலதார திருமணம், நிக்கா ஹலாலா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 7 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் முஸ்லிம் பெண்கள் தாக்கல் செய்திருந்த 5 மனுக்களும் அடங்கும்.
இந்த மனுக்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன், யு.யு. லலித், அப்துல் நஸீர் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அமர்வில் இடம் பெற்றிருக்கும் 5 நீதிபதிகளும் சீக்கிய, கிறிஸ்தவ, பார்சி, ஹிந்து, முஸ்லிம் மதங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையின்போதே, முத்தலாக் முறை சட்டபூர்வமானதாகக் கருதப்பட்டாலும், அது மிக மோசமான, விரும்பத்தகாத விவாகரத்து முறை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகநல ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சட்ட வல்லுநர் சோலி சோரப்ஜி இது தொடர்பாகக் கூறுகையில், 'இது மிகவும் முற்போக்கான தீர்ப்பு. இதன் மூலம் முஸ்லிம் பெண்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. இனிமேல் முத்தலாக் கூறி முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது' என்றார்.
மத்திய அரசு மீது விமர்சனம்
முத்தலாக் நடைமுறை தொடர அனுமதிக்கலாம் என்று கூறிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் மத்திய அரசை விமர்சித்தனர். இது தொடர்பாக தீர்ப்பின்போது அவர்கள் கூறியது:
முத்தலாக் முறையில் மத்திய அரசே முறையாக சட்டம் இயற்றி பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக நீதிமன்றம்தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், முத்தலாக் முறை பெண்களுக்கு பாரபட்சமானதுதான் ஒப்புக் கொண்ட நீதிபதிகள், எனினும், அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்று கூறினர்.
அதேவேளையில், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு. லலித் ஆகியோர் அளித்த பெரும்பான்மை தீர்ப்பில், முத்தலாக் என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படை உரிமைதானா? என்று மற்ற இரு நீதிபதிகளும் எழுப்பிய கேள்வியை தாங்கள் ஏற்கவில்லை என்று கூறிவிட்டனர்.
விவாகரத்துக்கான பிற வாய்ப்புகள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தொடர்ந்து மூன்று முறை தலாக் கூறும், முத்தலாக் முறையில் மட்டுமே விவாகரத்துப் பெற முடியாது. எனினும் தலாக் ஹசன், தலாக் அக்ஸன் முறைப்படி விவாகரத்து பெற முடியும். தலாக் ஹசன் முறைப்படி முஸ்லிம் ஆண் ஒருவர் ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து 3 மாதங்கள் தலாக் கூறுவதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்ய முடியும்.
தலாக் அக்ஸன் முறைப்படி கணவர் வீட்டில் 3 மாதங்கள் தங்கியிருக்கும் பெண், அவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாவிட்டால், கணவர் அவரை விவாகரத்து செய்ய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com