முத்தலாக் தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

முத்தலாக்' நடைமுறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பை பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
முத்தலாக் தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

முத்தலாக்' நடைமுறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பை பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சௌஹான், சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ' தீர்ப்பை எங்கள் கட்சி வரவேற்கிறது. இதுதொடர்பாக விரைவில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி கூறுகையில், 'இது நல்ல தீர்ப்பு; இதை வரவேற்கிறோம். பாலின சமத்துவம், பாலின நீதி ஆகியவை நோக்கிச் செல்ல இது வழிவகுக்கும்' என்றார்.
பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'சீர்திருத்தம் மேற்கொள்ள இந்த தீர்ப்பு வழி ஏற்படுத்தி தந்துள்ளது. இது முஸ்லிம் பெண்களுக்கு மிகச் சிறந்த நாள் ஆகும்' என்றார்.
தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் அமன்சிங், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், 'முத்தலாக் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் முன்பு பேசியிருந்தார். இந்நிலையில், முத்தலாக் தற்போது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது; முத்தலாக் தொடர்பாக மத்திய அரசு கடைப்பிடித்த கொள்கை சரியானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபணமாக்கியுள்ளது' என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். அந்த தீர்ப்பை மிக நல்ல முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், 'பெண்களின் உரிமைகளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது; பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து அவர்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'முத்தலாக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், தன்னிச்சையானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை கட்சியின் பொலிட் பீரோ வரவேற்கிறது. ஏற்கெனவே எங்கள் கட்சி, இந்த விவகாரத்தில் கடைப்பிடித்த நிலைப்பாடு சரிதான் என இந்த தீர்ப்பு நிரூபணமாக்கியுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றிருப்பதுடன், நாட்டில் இருக்கும் தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, போபாலில் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவமிக்கது
 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமஉரிமையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கு கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த தீர்ப்பு மூலம் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பானது, முஸ்லிம் பெண்களுக்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளது' என்றார்.
அருண் ஜேட்லி கருத்து: மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி கருத்து கூறுகையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பே தற்போது சட்டம்; தனிநபர் சட்டங்களில் முன்னேற்றம் வேண்டும் என்று நம்புவோருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்' என்றார்.
முஸ்லிம் தலைவர்கள் ஏற்க வேண்டும்
முத்தலாக் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை முஸ்லிம் மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிவசேனை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், 'முஸ்லிம் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சிவசேனை வரவேற்கிறது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு, முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் தற்போது நிம்மதியை தந்திருக்கும். எனவே இந்த தீர்ப்பை முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும், முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் பாதுகாப்பானதாக மாற அடித்தளமிடும்படியும் வேண்டுகோள் விடுக்கிறோம்' என்றார்.

தலாக் வழக்கு கடந்து வந்த பாதை....
அக்டோபர் 16, 2015: இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்து நடைமுறையில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தனி அமர்வை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று பரிந்துரை செய்தது.
பிப்ரவரி 5, 2016: முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய இஸ்லாமிய நடைமுறைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் உதவி செய்யுமாறு அப்போதைய மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
மார்ச் 28: முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகளை வழக்கின் வாதிகளாக சேர்க்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஜூன் 29: இந்திய அரசமைப்புச் சட்ட அம்சங்களுடன் ஒப்பிட்டு, முத்தலாக் முறையை ஆய்வு செய்து பார்க்க வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அக். 7: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
பிப். 16: முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய நடைமுறைகளுக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 27: நீதித்துறையின் வரம்புக்கு கீழ் வராததால் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வாதிட்டது.
மே 12: முத்தலாக் நடைமுறையானது மிகவும் மோசமான வழக்கம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மே 15: முத்தலாக் நடைமுறை ரத்து செய்யப்படும்பட்சத்தில், இஸ்லாமிய சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை முறைப்படுத்தும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.
மே 18: முத்தலாக் நடைமுறைக்கு எதிரான மனுக்களின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஆக. 22: இஸ்லாமிய மதத்தில் பின்பற்றப்பட்டு வரும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கூறி, அந்த நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com