முத்தலாக் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரத் தேவையில்லை: மத்திய அரசு

முத்தலாக் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முத்தலாக் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க பின்பற்றப்பட்ட 'முத்தலாக்' நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, அதுதொடர்பான வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்றிருந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்ளிட்ட 2 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, அதுபோல் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், 'முத்தலாக் நடைமுறைக்கு எதிராக புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறையை விசாரிக்க தனிச் சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களே போதுமானதாகும்' என்றார்.
இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளதால், ஆடவர்கள் இனிமேல், பெண்களுக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தாலும், அது செல்லாது.
முத்தலாக் அளித்த பிறகும், திருமணம் தொடர்பான அந்த நபரின் கடமை அப்படியேதான் இருக்கும். அந்த நபருக்கு எதிராக அவரது மனைவி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரின்மீது கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப முடிவு: இதனிடையே, 'முத்தலாக்' நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீர்ப்பு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முத்தலாக்' நடைமுறை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு செயல்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீர்ப்பு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்படி வலியுறுத்தியும், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பவிருக்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com