முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு இஸ்லாமியத்துக்கு கிடைத்த வெற்றி: முஸ்லிம் பெண்கள் தனிச்சட்ட வாரியம் கருத்து

தலாக் நடைமுறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இஸ்லாமியத்துக்கு கிடைத்த வெற்றி என்று அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிச் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

தலாக் நடைமுறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இஸ்லாமியத்துக்கு கிடைத்த வெற்றி என்று அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிச் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இஸ்லாமியப் பெண்களிடையே புதிய நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வாரியம் கூறியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் தலாக் நடைமுறை செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு ஒருபுறம் பாராட்டுகளும், மறுபுறம் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக முஸ்லிம் பெண்கள் தனிச்சட்ட வாரியத்தின் தலைவர் சாய்ஸ்தா அம்பர், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மூன்று முறை தலாக் எனக் கூறிவிட்டாலே ஒரு பெண்ணை அவரது கணவன் விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துவிட முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நடைமுறையை முஸ்லிம் மத குருமார்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிலர் வகுத்துச் சென்றுவிட்டனர். ஆனால், இந்த வழக்கத்தால் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கைப் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றம் மகத்தான தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது. இது முஸ்லிம் பெண்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; ஒட்டுமொத்த இஸ்லாமியத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்.
முத்தலாக் விவாகரத்து வழக்கத்தை ஒருமுறை ஒழித்துவிட்டால் அது மீண்டும் நடைமுறைக்கு வராது என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அகில இந்திய ஷியா தனிச்சட்ட வாரியமும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அதன் செய்தித்தொடர்பாளர் மெளலானா யாசூப் அப்பாஸ் கூறியதாவது:
உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதைப் போன்று தலாக் விவகாரத்திலும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தலாக் என்ற பெயரில் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
மறுஆய்வு கோர முடிவு?
தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்
என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படுமா? என்பது குறித்து அந்த வாரியம் தெளிவுபடுத்தவில்லை. முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யக் கூடாது என்று முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அந்த வாரியத்தின் உறுப்பினர் ஜாஃபர்யாப் ஜிலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த மாதம் 10-ஆம் தேதி வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ளது. அதில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com