3 மாநில இடைத்தேர்தல்: பாஜக, தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட ஆளும் கட்சிகள் வெற்றி

கோவா, ஆந்திரம், தில்லி உள்ளிட்ட 3 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இதில் ஆளும் பாஜக, தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெற்றன.
3 மாநில இடைத்தேர்தல்: பாஜக, தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட ஆளும் கட்சிகள் வெற்றி

கோவா, ஆந்திரம் மற்றும் தில்லி ஆகிய 3 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. இதில் அம்மாநிலங்களில் ஆளும் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெற்றன.

கோவா மாநிலத்தில் காலியாக இருந்த பனாஜி, வால்பாய் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. இதில் பனாஜி தொகுதியில் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மற்றும் வால்பாய் தொகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் ராணே வெற்றிபெற்றனர்.

பனாஜி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனோகர் பாரிக்கர் 9,862 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கிரிஷ் சௌதான்கர் 5,059 வாக்குகளும் பெற்றனர். வால்பாய் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராணே 16,167 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராய் நாயக் 6,101 வாக்குகளும் பெற்றனர்.

முன்னதாக, மத்திய ராணுவ அமைச்சராக இருந்த பாரிக்கர், கோவா தேர்தலை அடுத்து மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து அங்கு முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து பனாஜி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார். மேலும், இத்தொகுதியில் அவர் 6 முறை வெற்றிபெற்றுள்ளார்.

அதுபோல வால்பாய் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராணே சமீபத்தில் பாஜக-வில் இணைந்து சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தில்லி பாவானா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராம் சந்திரா வெற்றிபெற்றார். முன்னதாக இத்தொகுதியின் ஆம்ஆத்மி உறுப்பினர் வேத் பிரகாஷ் பாஜக-வில் இணைந்தார். இதனால் இங்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில், ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்திரா 59,886 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வேத் பிரகாஷ் 35,834 வாக்குகளும் பெற்றனர். இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுமார் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பிரம்மானந்த ரெட்டி வெற்றிபெற்றார். இங்கு தெலுங்கு தேசம் வேட்பாளர் பிரம்மானந்த ரெட்டி 97,076 வாக்குகள் பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா மோகன் ரெட்டி 69,610 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 1,382 வாக்குகள் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com