தில்லி பவானா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திங்கள்கிழமை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்திராவை தூக்கிக் கொண்டாடும் அக்கட்சியினர்.
தில்லி பவானா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திங்கள்கிழமை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்திராவை தூக்கிக் கொண்டாடும் அக்கட்சியினர்.

தில்லி பேரவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தில்லி பவானா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ராம் சந்திரா வெற்றி பெற்றார்.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தில்லி பவானா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ராம் சந்திரா வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்தத் தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்துக் கொண்டது. பாஜக வேட்பாளர் வேத பிரகாஷ் இரண்டாம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் குமார் மூன்றாம் இடமும் பெற்று பின்னடைவைச் சந்தித்தனர்.

கடந்த 23-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 45 சதவீதம் (1,31,818) வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கியது. ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்திரா 59,886 (45.39%) வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்த படியாக பாஜக வேட்பாளர் வேத பிரகாஷ் 35,834 (27.16%) வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் குமார் 31,919 (24.19%) வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இவர் முன்பு இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கு வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) 1,413 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.07 சதவீதமாகும்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பாஜக, பவானா தொகுதியில் கணிசமான அளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதேபோல மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸ் கட்சியும் தோல்வியைச் சந்தித்ததால் சட்டப்பேரவையில் தனது கணக்கை தொடங்க முடியாமல் போனது. இத்தொகுதியில் முதல் முறையாக வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 66ஆக உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com