நாரதா முறைகேடு விவகாரம்: மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

நாரதா இணையதளத்தில் வெளியான ஊழல் காட்சிகள் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
நாரதா முறைகேடு விவகாரம்: மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

நாரதா இணையதளத்தில் வெளியான ஊழல் காட்சிகள் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.

தெஹல்கா புலனாய்வு இதழில் பணிபுரிந்த மாத்யூஸ் சாம்வேல்ஸ், அந்நிறுவனத்தில் இருந்து விலகி, நாரதா இணையதளத்தைத் தொடங்கினார். அந்த இணையதளத்தில் மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் மாத்யூஸ் சாம்வேல்ஸ் தன்னை தொழிலதிபர் என்று தெரிவித்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சிகளும், இதையடுத்து, சில காரியங்களைச் செய்து தர அவர்களிடம் மாத்யூஸ் லஞ்சமாக பணம் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகும்படி, அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்ரதா முகர்ஜிக்கு சிபிஐ அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்தது.
அதையேற்று, கொல்கத்தாவில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தில் சுப்ரதா முகர்ஜி திங்கள்கிழமை ஆஜரானார். அவருடம், 4 மணி நேரத்துக்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பிறகு, சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே வந்த சுப்ரதா முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சிபிஐ மீண்டும் அழைத்தால் நேரில் ஆஜராகத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக சுப்ரதா முகர்ஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com