அந்தரங்கம் தொடர்பான தீர்ப்பை ஆய்வு செய்தபின் ஆதார் மனு விசாரணை: உச்ச நீதிமன்றம்

அந்தரங்கம் தொடர்பாக அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஆய்வு செய்த பிறகே ஆதார் மசோதா சம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரணை நடத்தப்படும்

அந்தரங்கம் தொடர்பாக அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஆய்வு செய்த பிறகே ஆதார் மசோதா சம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஜெய்ராம் ரமேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விவரம்:
ஆதார் மசோதா, 2016-ஐ நிதி மசோதாவாக திருத்தி அமைக்க மக்களவைத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தத் திருத்த மசோதா மாநிலங்களவையை புறக்கணிக்கும் நோக்கில் நிதி மசோதாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி மக்களவையில் ஆதார் மசோதா நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, மார்ச் 16-ஆம் தேதி மாநிலங்களவையின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அன்றைய தினமே திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு நிதி மசோதாவாக ஆதார் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இதற்கு மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பி.சி.பந்த், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பாக அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ஆய்வு செய்த பிறகே இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, மிக முக்கியமான விவகாரம் என்பதால் இந்த மனுவை அவசரமான ஒன்றாகக் கருதி விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com