சசி தரூரின் 'மவுனத்திற்கு மரியாதை':  அர்னாப் கோஸ்வாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! 

சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளில் சசி தரூரின் மவுனத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சசி தரூரின் 'மவுனத்திற்கு மரியாதை':  அர்னாப் கோஸ்வாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! 

புதுதில்லி: சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளில் சசி தரூரின் மவுனத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், தெற்கு தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மரணம் தொடர்பாக 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி ஒளிபரப்பிய விவாத நிகழ்ச்சிகளில்  காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை குற்றம் சாட்டி கருத்துக்கள் இடம்பெற்றன. எனவே தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக, தவறான செய்திகளை ஒளிபரப்பு செய்வதற்கு 'ரிபப்ளிக்' தொலைக்காட்சிக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் சசி தரூர் கூறியிருப்பதாவது:

எனது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் தொடர்பான செய்திகளை 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டது.

அதையடுத்து, அந்தத் தொலைக்காட்சியிடமும், அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடமும், ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நீதிபதி மன்மோகன் முன்னிலையில், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சுனந்தா புஷ்கரின் மரணத்தில் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்றும், என்னை (சசி தரூர்) குற்றவாளி என்று கூறக்கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

அர்னாப் கோஸ்வாமி சார்பில் ஆஜரான அவரது தரப்பு வழக்குரைஞர், இனிமேல் அவ்வாறு செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படாது; இதுதொடர்பாக, அர்னாப் கோஸ்வாமிக்கு அறிவுறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதையும் மீறி, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தீய நோக்கத்துடனும், வேண்டுமென்றே தவறான செய்திகளை 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டாரா? என்பதை நீதிமன்றமே இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

எனவே, நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு 'ரிபப்ளிக்' தொலைக்காட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மன்மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் உரிமையை 'ரிபப்ளிக்' தொலைக்காட்சியிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. ஆனால் அதில் ஒரு சமநிலை பேணப்பட வேண்டும்.

இனி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் முன்னர் சசி தரூரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவருக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அமைதி காக்க உரிமையுண்டு. ஒரு விஷயத்தில் கருத்து தெரிவிக்குமாறு  அவனை யாரும் கட்டாயப்படுத்தவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது.

எனவே சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான செய்திகளில் சசி தரூரின் மவுனத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com