மன்மோகன் பெயருக்கு பிரதமர், க்ளோன் ஹிந்து ராகுல்: காங்கிரஸை சீண்டும் அருண் ஜேட்லி

அலுவலகத்தில் பெயருக்கு மட்டுமே மன்மோகன் சிங் பிரதமராக இருந்ததாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மன்மோகன் பெயருக்கு பிரதமர், க்ளோன் ஹிந்து ராகுல்: காங்கிரஸை சீண்டும் அருண் ஜேட்லி

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளில் முறைகேடு செய்து பாஜக வென்றதாக 2-ஆவது இடம்பிடித்த பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதவிர சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், சோம்நாத் கோவிலுக்குச் சென்ற போது அங்கிருந்த பதிவேட்டில் ஹிந்து அல்லாதவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்விகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே தன்னுடைய குடும்பத்தினர் சிவ பக்தர்கள் என்றும் இந்திரா எப்போதுமே ருத்ராட்ஷம் அணிந்திருப்பார், இன்றுவரை தான் சிவ பூஜை செய்து வருவதாகவும், அதை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதில்லை என்று ராகுல் இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இவ்விகாரங்கள் தொடர்பாக கூறியதாவது:

பாஜக எப்போதுமே ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சிதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உண்மையான ஹிந்து ஆதரவு கட்சியைக் கண்டு பயந்து தற்போது ஒரு க்ளோனிங் ஹிந்து கட்சி உருவாகி வருகிறது. அதை யாரும் ஏற்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மகத்தானது. இதனை சகித்துக்கொள்ள முடியாத, தோல்வியைச் சந்தித்தவர்கள் அந்தப் பழியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது திசை திருப்புகின்றனர்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது அனைவரும் நரேந்திர மோடியை ஹிந்து அல்லாதவர். ஹிந்துக்களுக்கு துரோகம் இழைப்பவர் என்று கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் ஹிந்து அல்லாதவர் இருப்பது காங்கிரஸில் தான். அதிலும் குறிப்பாக அதன் துணைத்தலைவர் ராகுல் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிக மோசமான ஆட்சியைக் கண்டுள்ளது. அந்த அரசாங்கத்தில் தலைவர் என யாரும் கிடையாது. அலுவலகத்தில் மட்டுமே மன்மோகன் சிங் பெயரளவுக்கு பிரதமராக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்நிய முதலீடு முற்றிலும் நின்றுபோனது. இதனால் பொருளாதாரம் சீர்குலைந்தது. 

தற்போது இந்த அனைத்து சிக்கல்களும் சீர்செய்யப்பட்டு இந்தியா வளமுடன் முன்னேறி வருகிறது. சுலபமாக சுயதொழில் முனையும் நாடுகளில் இந்தியா 42-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவே வளர்ச்சியின் பாதை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com