உலகமயமாக்கலால் இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடையும்: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

உலகமயமாக்கலின் பயனாக இந்திய பொருளாதாரம், இனி வருங்காலங்களில் பிற நாடுகளைக் காட்டிலும் மேலும் வலுவடையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி கூறினார்.

உலகமயமாக்கலின் பயனாக இந்திய பொருளாதாரம், இனி வருங்காலங்களில் பிற நாடுகளைக் காட்டிலும் மேலும் வலுவடையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி கூறினார்.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் 'சுதந்திரத்திலிருந்து இந்தியா -பொருளாதார கொள்கை குறித்த மாற்றம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒய்.வி. ரெட்டி பேசியது: நாம் தற்போது 70 -ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதே வேளையில், 1991 -இல் இந்திய பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் 25 -ஆவது ஆண்டையும் கொண்டாடுகிறோம். 1947 -இல் சுதந்திரத்துக்குப் பிறகு 1972 -ஆம் ஆண்டு வரையிலான நம் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளால், வளரும் நாடுகளில் நாம் பொருளாதாரத்தில் வலிமை பெற்று வருகிறோம்.
நாடு சுதந்திரம் பெற்றபோது ஒரே தேசமாக இருக்குமா என சந்தேகித்தனர். இன்றைக்கும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் முயற்சிகள் நடந்து வந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் நம்முடைய ஒற்றுமையை நிலைப்பெறச் செய்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு நாடு நான்கு போர்களை சந்தித்துள்ளது. ஆனாலும் நம்முடைய பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பு மிக ஆழமாக அமைந்திருந்ததால், இன்றைக்கு நாம் சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளோம்.
1991 -இல் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, நாடு பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றத்தை பெறத் தொடங்கியது. அதன் பிறகு பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், புதிய கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்து வருகிறது.
உலகமயமாக்கல் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துள்ளதன் பயனாக, பிற வளர்ந்து வரும் நாடுகளைக் காட்டிலும் எதிர்காலத்தில் வேகமான முன்னேற்றத்தை இந்தியா அடையும் என்றார் ஒய்.வி.ரெட்டி. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் முன்னாள் செயலர் எம்.கணபதி, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் முதுநிலை துணைத் தலைவர் ஆர்.கணபதி, துணைத் தலைவர் அருண், செயலர் எஸ்.ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com