புது தில்லிக்கு ஒக்கி புயல் அளித்த மிகப்பெரிய 'பரிசு': மக்கள் மகிழ்ச்சி

தமிழகம், கேரளா, லட்சத் தீவுகளை சூறையாடி பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற ஒக்கி புயல் தலைநகர் புது தில்லிக்கு மிகப்பெரிய பரிசொன்றை அளித்துள்ளது.
புது தில்லிக்கு ஒக்கி புயல் அளித்த மிகப்பெரிய 'பரிசு': மக்கள் மகிழ்ச்சி


புது தில்லி: தமிழகம், கேரளா, லட்சத் தீவுகளை சூறையாடி பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற ஒக்கி புயல் தலைநகர் புது தில்லிக்கு மிகப்பெரிய பரிசொன்றை அளித்துள்ளது.

புது தில்லியின் காற்று மாசு எனப்படும் மிகப்பெரிய பிரச்னையை ஒக்கி புயலானது ஒன்றும் இல்லாமல் செய்துள்ளது. அதாவது காற்றின் தரம் மிக மிக மோசம் என்ற இடத்தில் இருந்து மிக மோசம் மற்றும் மோசம் என்ற தரத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் இது குறித்துக் கூறுகையில், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் காற்றின் தரம் உயர்ந்து வருகிறது. இது தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தில்லியில் நிலவிய மிக மோசமான காற்று மாசு காரணமாக இதுவரை காற்றின் நகர்வு வேகம் மோசமாக இருந்தது. ஆனால், தற்போது, வடக்கில் இருந்து காற்று தெற்கு நோக்கி இனி எளிதாக நகரும் என்றும் அவர் தெரிவித்தார்.

காற்று மாசுபாட்டால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த தில்லிவாசிகள் ஒக்கி புயலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

வடக்கு இந்திய மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டினை, ஒக்கி புயல் சரி செய்துவிடும் என்று நாசா எர்த் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம் என்றால் எவ்வளவு தெரியுமா?
கடந்த வாரம் தில்லி காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற அளவில் பதிவாகியிருந்த நிலையில், தில்லியில் காற்றில் உள்ள பி.எம். 2.5, பி.எம். 10 நுண்மாசுத் துகள்களின் அளவு அதிகரித்திருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து கூறப்பட்டதாவது, காற்றின் தரக் குறியீடு கடந்த வாரம் 303 (மைக்ரோகிராம்/மீட்டர் கியூப்) ஆகப் பதிவாகியிருந்தது.  முந்தைய நாள்களைவிட காற்றில் உள்ள பி.எம் 2.5, பி.எம் 10 நுண்மாசுத் துகள்களின் அளவு அதிகரித்தது. பி.எம் 10 இன் அளவு 335- ஆகவும் ( மைக்ரோ கிராம்/ கியூபிக் மீட்டர்) பி.எம் 2.5 நுண் மாசுத்துகள்களின் அளவு 201-ஆகவும் பதிவாகியிருந்தது. 

நகரில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் நுண் மாசுத் துகள்கள் இலகுவாக பரவக் கூடியதாக இருந்தது. வானம் தெளிவாகக் காணப்படுவதுடன் போதிய சூரிய வெளிச்சம் காணப்படுவதால் இந்த நுண்துகள்கள் அதிகளவு உயரத்திற்குப் பரவவும் காரணமாக இருந்தன.

தில்லி தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள பகுதியில் கடந்தவாரம் புதன்கிழமை தில்லியில் மிக மோசமான காற்றின் தரக் குறியீடு பதிவானது. 

அத்துடன் இப்பகுதியில் பி.எம் 2.5 நுண் மாசுத் துகளின் அளவு 497 ஆக இருந்தது. ஆனந்த் விஹார், ஆர்.கே.புரம் ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையிலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்போது ஒக்கி புயல் காற்றால் தில்லியின் காற்றுமாசு படிப்படியாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com