மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் அரசியல் சாசன விதிகளின்படி செல்லத்தக்கது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் வாயிலாக வாடிக்கையாளர்கள்

மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் அரசியல் சாசன விதிகளின்படி செல்லத்தக்கது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகங்களில் ஒன்றாகக் கருதப்படும் மனை வணிகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்த நிலையில், அவற்றுக்கு கடிவாளமிடும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தது. 9 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு அந்தச் சட்டம் கடந்த மே மாதத்தில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் அந்தச் சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புதிய சட்டத்தின்படி, மனை-வணிக விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்தையும் ஒழுங்காற்று அமைப்பிடம் பதிவு செய்வதுடன், திட்டத்தின் நிலை குறித்து வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டினை ஒப்படைக்காவிட்டால் கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சதவீத வட்டியை வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்ற அம்சமும் அதில் உள்ளது. அதேபோன்று, விதிமீறலில் ஈடுபடும் கட்டுமான உரிமையாளர்கள், முகவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் அந்தச் சட்டத்தில் விதிகள் உள்ளன.
அந்த அம்சங்களை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதுதானா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நரேஷ் படேல், ராஜேஷ் கேட்கர் ஆகியோர் விசாரித்து வந்த நிலையில், புதன்கிழமை அதன் மீதான தீர்ப்பை வெளியிட்டனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:
மனை வணிக நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகளும், பிரச்னைகளும் நடைபெற்று வருகின்றன. அவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தருணமிது. அனைவரது கண்ணீரையும் துடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை வென்றெடுக்க வேண்டிய வேளை இது. வாடிக்கையாளர்களின் நலனைக் காப்பதற்கு மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டமானது அவசியமான ஒன்று. அது அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதே.
அதேவேளையில், அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மாநில அரசுகள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுத்தலாம். 
கட்டுமானப் பணிகள் தாமதமாவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பின், அதனை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com