வீடியோ கேமிற்கு அடிமையாகி தாய் மற்றும் தங்கையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற 16-வயது சிறுவன்!

கடந்த செவ்வாய்க் கிழமை பெற்ற தாயையும், தங்கையையும் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 16-வயது சிறுவன் வீடியோ கேம் விளையாட்டு ஒன்றிற்கு அடிமையாக இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
வீடியோ கேமிற்கு அடிமையாகி தாய் மற்றும் தங்கையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற 16-வயது சிறுவன்!

உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் நொய்டா பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை பெற்ற தாயையும், தங்கையையும் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 16-வயது சிறுவன் வீடியோ கேம் விளையாட்டு ஒன்றிற்கு அடிமையாக இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

தொழிலதிபர் ஒருவரின் மகனான இவன் டிசம்பர், 5-ம் தேதி இரவு தனது 42-வயது தாயையும், 11-வயது தங்கையையும் கிரிக்கெட் மட்டையால் அடித்து, பின்னர்  கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளான். கொலை நடந்த இரவு பக்கத்து அரையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ரத்தம் படிந்த சட்டையுடன் இந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியே செல்வது பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து இந்த இரட்டைக் கொலை வழக்கில் இவனை முக்கிய குற்றவாளியாக காவல் துறை அறிவித்து, ஐந்து தனிப்படை அமைத்துத் தேடி வருகிறது. 

இந்நிலையில் விசாரணையின் போது சிறுவனின் தந்தை கொடுத்த வாக்கு மூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் கூறியதாவது “அவனுக்குப் படிப்பில் கவனமே கிடையாது, எப்போதும் மொபைல் ஃபோனில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருப்பான். அவன் இப்போது 10-ம் வகுப்புப் படிப்பதால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனுடைய ஸ்மார்ட் ஃபோனை அவனிடமிருந்து நான் வாங்கிவிட்டேன், ஆனாலும் அவன் என் மனைவியின் ஃபோனில் தொடர்ந்து ‘ஹை ஸ்கூல் கேங்க்ஸ்டர் எஸ்கேப்’ (High School Gangster Escape) என்கிற கேமை விளையாடிக் கொண்டே தான் இருந்தான், நான் பல முறை அவனை அதட்டியும் அந்த விளையாட்டிற்கு அவன் அடிமையாக இருந்ததால் நான் கூறிய எதுவும் அவன் காதில் விழவே இல்லை” என்று கண்களில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இவர் குறிப்பிட்ட அந்த விளையாட்டு மிகவும் வன்முறையான 16-வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடக் கூடிய ஒன்றாகும். இந்த விளையாட்டில் பள்ளியில் (High School) படிக்கும் மாணவர்கள் கையில் கிடைப்பதை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, ரத்தம் தெரிக்க தெரிக்கச் சண்டை போடுவது, சிறைச்சாலை போல் இருக்கும் அந்தப் பள்ளியில் இருந்து தப்பித்து வெளியே செல்வது போன்ற நிலைகளைக் கொண்டுள்ளது.

தப்பிச் சென்ற சிறுவன் கையில் தன் அம்மாவின் கைப்பேசியை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளான் ஆனால் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளான். இந்தச் சிறுவனின் புகைப்படம் மற்றும் பெயர் கொண்ட எச்சரிக்கை படிவங்கள் அந்தப் பகுதி முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சிறுவனை பற்றிய தகவல் தருபவருக்குத் தக்க சன்மானம் வழங்கப் படும் என்றும் காவல் துறை  தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தற்கொலைக்குத் தூண்டும் ‘புளு வேல்’ கேமின் பாதிப்பு அடங்கி சில நாட்களே ஆன நிலையில் தற்போது சிறுவர்களைக் கொலைகாரர்களாக்கும் அடுத்த விளையாட்டு இந்தியாவிற்குள் நுழைந்திருப்பது கவலையை தருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com