இஸ்லாமிய மக்கள் தொகையை குறைக்க வேண்டும்

இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சைலேஷ் சோட்டா தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை

இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சைலேஷ் சோட்டா தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை 
ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மக்களிடையே மதரீதியான மோதல்களை அவர் உருவாக்க முயலுவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், குஜராத்தின் தபோய் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள சைலேஷ் சோட்டா, வியாழக்கிழமை பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்துகள் பலத்த விமர்சனத்துக்கு வித்திட்டுள்ளன. 
இஸ்லாமியர்களுக்கு எதிரான அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. பிரசாரத்தின்போது சைலேஷ் பேசியதாவது:
இந்தக் கூட்டத்தில் குல்லா அணிந்தவர்களும், தாடி வைத்திருப்பவர்களும் (இஸ்லாமியர்கள்) இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் அவர்களுக்கு எதிராகத்தான் நான் பேசப்போகிறேன். அவர்களது சமூகத்தின் மக்கள் தொகையை குறைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மதரீதியான தாக்குதல்களை அவர்கள் தொடர்ந்து அரங்கேற்றுவார்களேயானால், அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றிப் பேச வேண்டாம் என என்னிடம் அறிவுறுத்தப்பட்டது. 
நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள அந்த சமூகத்தினர் எதிர்ப்பார்கள் என்பதற்காக நான் இதைக் கூறாமல் இருக்க முடியாது. மீதமுள்ள 90 சதவீதம் பேர் என்னை ஆதரிப்பார்கள்.
அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவே இங்கு வந்துள்ளேன். மாறாக அஞ்சி நடுங்கி வரவில்லை என்றார் அவர்.
இதனிடையே, சைலேஷின் இந்தக் கருத்துகளுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வர்மா என்பவர் அந்தப் புகாரை அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com