ஒக்கி புயல்: கேரளத்தில் 36 பேர் பலி

கேரளக் கடல் பகுதியில் மேலும் 3 உடல்கள் வியாழக்கிழமை கரை ஒதுங்கியதையடுத்து, ஒக்கிப் புயல் பாதிப்பால் அந்த மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.

கேரளக் கடல் பகுதியில் மேலும் 3 உடல்கள் வியாழக்கிழமை கரை ஒதுங்கியதையடுத்து, ஒக்கிப் புயல் பாதிப்பால் அந்த மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது ஒக்கி புயலாக வலுப்பெற்றது. தமிழக - கேரள கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த அந்தப் புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. வரலாறு காணாத வகையில் அந்தப் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
அதேபோன்று கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றது அந்தப் புயல். கடலுக்குள் சென்ற மீனவர்களில் சிலர் நீரில் மூழ்கி இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரளத்தின் ஆலப்புழை கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை 3 உடல்கள் கரை ஒதுங்கியதாகத் தெரிகிறது. அந்த சடலங்களை மீட்ட பாதுகாப்புப் படையினர் அவற்றை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு நடுவே, காணாமல் போன 96 மீனவர்களைக் கண்டறியும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில், ஒக்கி புயல் காரணமாக கடந்த சில நாள்களாக முடங்கியிருந்த கப்பல் போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொச்சி - லட்சத்தீவுகளைத் தொடர்ந்து கோழிக்கோடு - லட்சத்தீவுகளுக்கு இடையேயான பயணிகள் கப்பல் புதன்கிழமை இயக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com