மானசரோவர் பார்க் 5 பேர் கொலைச் சம்பவம்: தேடப்பட்ட 7 பேரும் கைது: கொள்ளைத் திட்டத்தை காவலாளி வகுத்தது அம்பலம்

மானசரோவர் பார்க்கில் வசித்து வந்த முதாட்டி, அவரது 3 மகள்கள், காவலாளி ஆகிய 5 பேரை கொன்று, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில்
மானசரோவர் பார்க் 5 பேர் கொலைச் சம்பவம்: தேடப்பட்ட 7 பேரும் கைது: கொள்ளைத் திட்டத்தை காவலாளி வகுத்தது அம்பலம்

மானசரோவர் பார்க்கில் வசித்து வந்த முதாட்டி, அவரது 3 மகள்கள், காவலாளி ஆகிய 5 பேரை கொன்று, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த  7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் கொலையுண்ட காவலாளி என்பது விசாரணையில் தெரிய வந்ததாக  போலீஸார் கூறினர்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:  
வடகிழக்கு தில்லி மானசரோவர் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் உர்மிளா ஜிண்டால் (82). அவரது மகள்கள் சங்கீதா (56), அஞ்சலி (38), நுபுர் (48). அந்த வீட்டின் காவலாளியாக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றியவர் ராகேஷ் (42). 

இந்நிலையில், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி உர்மிளா ஜிண்டால் உள்பட 5 பேரும் கொல்லப்பட்டு  வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இக்கொலைக்கு சொத்துப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தீவிர விசாரணைக்குப் பிறகு, வீட்டில் உள்ள நகை, பணத்தை கொள்ளை அடிக்க இக்கொலை நடந்துள்ளதாகத் தெரிய வந்தது. இதையடுத்து,  கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.  அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. ஆனால், அதில் உருவங்கள் சரிவர பதிவாகாததால்  இந்த வழக்கில் துப்புத் துலக்குவது போலீஸாருக்கு  பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், இக்கொள்ளைக்கு அந்த வீட்டில் கவாலாளியாக பணியாற்றி வந்த ராகேஷ் முக்கிய மூளையாகச் செயல்பட்டது தனிப் படையினருக்குத் தெரிய வந்தது. 

அவர் அந்த வீட்டில் சுமார் 15 ஆண்டுகளாக காவலாளியாகப் பணியாற்றி வந்ததால் அந்த வீட்டில் உள்ள பணம், நகை குறித்து அறிந்து வைத்துள்ளார். மேலும், அந்தக் குடும்பத்தினருக்கு சொத்து விற்பனையிலும் கணிசமான அளவு பணம் கிடைத்துள்ளது என்பதையும் அறிந்துள்ளார்.  இது குறித்து தனது மகன் அனுஜ், மருமகன் விகாஸ் ஆகிய இருவரிடமும் தெரிவித்த ராகேஷ்,  நகை, பணத்தை கொள்ளையடிக்கலாம் என்றும் திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ,  ராகேஷின்  மருமகன்  விகாஸிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது,  5 பேரைக் கொன்று நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டார். இக்கொள்ளைக்கு முக்கிய மூளையாகச்  ராகேஷ் செயல்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தார்  என்பதால் அவரை  கொன்றுவிட்டதாக வாக்குமூலத்தில் விகாஸ் தெரிவித்தார்.

ராகேஷ் வகுத்த சதித்திட்டத்தின்படி  அனுஜ், மருமகன் விகாஸ் ஆகிய இருவரும் உர்மிளா ஜிண்டால் வீட்டில் கொள்ளையை நடத்த முடிவு செய்தனர். கொள்ளைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற சரியான ஆள்களையும் தேடி வந்தனர். முதலில்  நீரஜ், தீபக் ஆகியோரை அனுஜ் தனது வலையில் விழவைத்துள்ளார். பின்னர், சன்னி, விக்கி, நிதின் ஆகிய மூவரையும் கொள்ளைச் சம்பவத்துக்கு விகாஸ் சம்மதிக்கவைத்துள்ளார்.  இதையடுத்து, அவர்கள் ஏழு பேரும் சேர்ந்து கொள்ளையை நிறைவேற்ற முடிவெடுத்தனர்.

தங்களது திட்டத்தின்படி, கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஏழு பேரும் லோனி பகுதியில் கூடினர். அப்போது தங்களது செல்லிடப்பேசிகளை அணைத்து வைத்தனர்.  இதைத் தொடர்ந்து,  அவர்கள் உர்மிளா ஜிண்டால் வீட்டிற்கு  அன்று நள்ளிரவு சென்றுள்ளனர்.  அவர்களை காவலாளி ராகேஷ் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.

பின்னர் வீட்டின் பிரதான கதவை ராகேஷ் தட்டிய போது உர்மிளாவின் மகள் நுபர் கதவைத் திறந்துள்ளார். தன்னைப் பார்ப்பதற்காக தனது குடும்பத்தினர் வந்திருப்பதாக அவரிடம் ராகேஷ் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நுபர், அவர்களை காவலாளி அறையிலேயே தங்க வைத்துக் கொள்ளும்படி ராகேஷிடம் கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் ராகேஷின் மருமகன் விகாஸ், நுபுரை பின்பக்கமாக கட்டிப்பிடித்து வீட்டினுள் கொண்டு சென்று கழுத்தை அறுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து, மற்றவர்கள் வீட்டினுள் நுழைந்து வீட்டில் இருந்த உர்மிளா ஜிண்டால் உள்பட மூவரையும் குத்திக் கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வந்த போது,  வீட்டில் காவல் பணியில் இருந்த  ராகேஷை அவரது மகன் அனுஜ், மருமகன் விகாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து  கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் ஜிடிபி மருத்துவமனைக்கு பின்புறம் கூடி கொள்ளையடித்த நகைகளையும், பணத்தை தலா ரூ.2 லட்சம் வீதம் பிரித்துக் கொண்டுள்ளனர். மொத்தம் ரூ.30-ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது  விசாரணையில் தெரிய வந்தது.

இதில் முதலில் கைது செய்யப்பட்ட ராகேஷின் மருமகன் விகாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ராகேஷின் மகன் அனுஜ், அவரது கூட்டாளிகள் சன்னி (22), விகாஸ் (எ) விக்கி, நீரஜ் (37) ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர்களான நிதின் (30), தீபக் (30) ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில்,  அவர்களும்  புதன்கிழமை மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com