ஒரு ஆண்டில் எத்தனை நாட்கள் நாடாளுமன்றம் செயல்படுகிறது? தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தாமதமாகத் தொடங்கவிருப்பது கடும் விமரிசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைப் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு ஆண்டில் எத்தனை நாட்கள் நாடாளுமன்றம் செயல்படுகிறது? தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்!


புது தில்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தாமதமாகத் தொடங்கவிருப்பது கடும் விமரிசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைப் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த புள்ளி விவரத்தில், கடந்த 10 ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் 47% மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நடந்த நேரத்தைக் கணக்கிட்டால் 1952ம் ஆண்டு முதல் அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த நேரத்தை விட, அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமாக நேரம் குறைந்து வந்திருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிய வந்துள்ளது.

அதாவது, 1952ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 128 முதல் 132 நாட்கள் நாடாளுமன்ற அவைகள் செயல்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 64 முதல் 67 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் விவாதமே இல்லாமல், கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது நாடாளுமன்றத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது ஒன்று இரண்டல்ல சுமார் 47% மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. 

மத்திய அரசு கொண்டு வந்த 47% மசோதாக்களை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி, சந்தேகங்களும் இன்றி நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் அனுமதித்துள்ளன என்பது இதன் மூலம் விளங்குகிறது. இதிலும், பல மசோதாக்கள், கூட்டத் தொடரின் இறுதி நாளன்று கடைசி 3 மணி நேரங்களுக்குள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியும் மிக மோசமான அளவுக்குக் குறைந்துள்ளது. ஒரு பக்கம் குறைந்த கல்வித் தகுதி இருக்கும் அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துமாறு இதே ஆண்டுகளில்தான் அதிக முறை கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

அதாவது கடந்த 20 ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 62% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 11 சதவீதம் மட்டுமே.

கடந்த 10 ஆண்டுகளில் 30 வயதுக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 71% ஆகும். 40 வயதுக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 57% ஆகவும் உள்ளது.

ஆண்டுக்கு வெறும் 64 முதல் 67 நாட்களே நடைபெற்ற நாடாளுமன்றத்தில், மிகவும் ஆச்சரியப்படும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com