காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி?

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்வித கருத்தொற்றுமையும் ஏற்படாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) கூட்டம் முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்வித கருத்தொற்றுமையும் ஏற்படாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) கூட்டம் முடிவுக்கு வந்தது.
தில்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழுவின் இருநாள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்சியின் அரசியல் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் இரு கருத்துகளை முன்வைத்தனர்.
முக்கியமாக, "அடுத்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்து வெளியேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல்ரீதியாக அவர்கள் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்' என்ற கருத்தை சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.
ஆனால், இப்போது பாஜகதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் எதிரி. எனவே, அந்த மதவாத சக்தியை அகற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். காங்கிரஸýடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று பிரகாஷ் காரத் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்துக்கு பொலிட்பீரோ உறுப்பினர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை.
எனவே, இது தொடர்பாக கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மத்தியக் குழு கூட்டம் கொல்கத்தாவில் ஜனவரி 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com