குஜராத் தேர்தலில் 110 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: சங்கர்சிங் வகேலா கணிப்பு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில், 110க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா
குஜராத் தேர்தலில் 110 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: சங்கர்சிங் வகேலா கணிப்பு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில், 110க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
குஜராத்தில் பாஜகவுக்கு சிறப்பான அடித்தளம் உள்ளது. அக்கட்சிக்கு தொண்டர்களும் அதிக அளவில் உள்ளனர். அப்படியிருக்கையில், குஜராத்தில் பாஜகவுக்கு சவால் விடுக்க வேண்டுமென்றால், தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே காங்கிரஸ் தனது பணியைத் தொடங்கியிருக்க வேண்டும்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் நான் கட்சி 90 இடங்களைப் பிடித்து, மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல், நான் முதல்வராக விரும்பவில்லை எனவும் தெளிவாக தெரிவித்திருந்தேன். அப்போது அவர், "தில்லியில் உங்களுக்கு நான் நண்பராக இருப்பேன்; மாநிலத்தில் காங்கிரûஸ வழிநடத்த உதவுவேன்' என வாக்குறுதி அளித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில தலைவர்கள், குஜராத்தில் கட்சி வெற்றி பெறுவதை விரும்பவில்லை.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என்று, பாஜகவுடன் காங்கிரஸில் இருக்கும் சில தலைவர்கள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் அவர்கள் வெற்றி பெறுவர். குஜராத் தேர்தலில் பாஜக 110 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றார் வகேலா.
அப்போது அவரிடம், பாஜகவுக்கு திரும்பிச் செல்வீர்களா? என பிடிஐ செய்தியாளர் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்கையில், "எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தருவதாக பாஜக தெரிவித்தது. ஆனால், அதை என் மகன் நிராகரித்து விட்டார். ஆதலால், பாஜகவுக்கு திரும்பிச் செல்வது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை' என்றார்.
77 வயதாகும் வகேலா, பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளிலும் முன்பு இருந்துள்ளார். குஜராத் முதல்வராக கடந்த 1996 முதல் 1997-ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். மேலும் 6 முறை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து இருந்து அண்மையில் விலகிய வகேலா, ஜன் விகல்ப் மோர்ச்சா எனும் பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com