குஜராத் தேர்தலில் தலையீடா? மோடியின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் பதிலடி

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், அது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும்,

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், அது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், இந்தியாவின் உள்நாட்டு அரசியலுக்குள் தங்களை இழுக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் பதில் கூறியுள்ளது.
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாக' குற்றம்சாட்டினார். 
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், குஜராத் முதல்வராக வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் சர்தார் அர்ஷத் ரஃபீக் விருப்பம் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் இல்லத்தில் ரகசிய சதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், சுட்டுரையில் திங்கள்கிழமை பதிவொன்றை வெளியிட்டார்.
அதில், 'குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது; பொறுப்பற்றது. தங்களது தேர்தல் விவாதத்தில், பாகிஸ்தானை இழுப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். 
கட்டுக்கதைகளின் அடிப்படையில் இல்லாமல், சுய வலிமையின் மூலம் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்' என்று முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கண்டனம்: இதனிடையே, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை கூறியுள்ளதாக, பாகிஸ்தானுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குஜராத் தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஆர்வத்துடன் சில கருத்துகளை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் தங்களது சுய வலிமையின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேவையற்ற கருத்தாகும்.
இந்தியாவின் ஜனநாயகம் பெருமைக்குரியது; இந்தியர்களுக்கு பாடம் கற்பிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு, ஒட்டுமொத்த உலகத்துக்கும் தெரியும்.
காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றும் நோக்கிலேயே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com