குஜராத்தில் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பிரசாரம் செய்யும் பாஜக: சிவசேனை தாக்கு

குஜராத் சட்டப் பேரவைக்கு நடக்கும் தேர்தலையெட்டி பாஜக மிகவும் தரம் தாழ்ந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத் சட்டப் பேரவைக்கு நடக்கும் தேர்தலையெட்டி பாஜக மிகவும் தரம் தாழ்ந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனையின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத் தேர்தலில் மோடி ஒரு தேசியத் தலைவரைப் போல் பிரசாரம் செய்யாமல் ஒரு மாநிலத் தலைவரைப் போல் பேசி வருகிறார். காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மணிசங்கர் அய்யர் தனக்கு எதிராகக் கருத்து கூறியதன் மூலம் குஜராத் மக்களை அவர் அமவதித்ததாக மோடி கூறியுள்ளார். இந்தக் கருத்தின் மூலம் மோடி தன்னைத் தானே சிறுமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாம் அவரை இந்த நாடு மற்றும் ஹிந்துக்களின் பெருமிதம் என்று கருதுகிறோம். ஆனால் அவரோ தன்னை குஜராத் கௌரவத்துடன் தன்னை பிணைத்துக் கொள்கிறார்.
குஜராத் முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு இயநந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், பாஜக ஆதரவிலான தேர்தல் ஆணையத்திடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார் அளிப்பது வீண் வேலைதான். குஜராத் தேர்தல் பிரசாரமானது வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த அம்சம் பிரதமரின் பிரசாரத்தில் இடம்பெறவில்லை. அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பேசும்போது சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுகிறார். சில நேரங்களில் மிகவும் தீவிரமாகப் பேசுகிறார்.
இந்த மாநிலம்தான் நமக்குப் பிரதமரை அளித்துள்ளது. இங்குதான் பாஜக 22 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது பாஜக குஜராத்தில் தனது பிரசாரத்தில் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் செல்வது ஏன்? அங்கு தேர்தல் பிரசாரத்தின் தரம் தாழ்ந்ததற்கு பாஜகதான் காரணம்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2014-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, சிவாஜி மன்னருக்கு எதிரான பிஜாபூர் சமஸ்தானத்தின் தளபதி அஃப்சல் கான் குறித்து நாங்கள் (சிவசேனை) பேசினோம். 'பாஜக தலைவர்கள் அஃப்சைல் கானைப் போல் மகாராஷ்டிரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனர்' என்று நாங்கள் பேசினோம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, நாங்கள் தரம் தாழ்ந்த முறையில் பேசுவதாகக் கூறியது. ஆனால் தற்போது குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடியே முகலாயர் ஆட்சிக்காலம் குறித்துப் பேசுகிறார்.
'காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றாலே போதும்; தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவது சுலபமாகி விடும்' என்று நம்பப்படுகிறது. அதுதான் உண்மை என்றால் அவவருக்கு எதிராக பிரதமர், பாஜகவின் தேசியத் தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் குஜராத்தில் பிரசாரம் செய்வது ஏன்? நாட்டு மக்களுக்கு இது புரியாத புதிராக உள்ளது என்று 'சாம்னா' தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளரது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com