குஜராத்: இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 93 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

குஜராத் சட்டப் பேரவைக்கான இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இங்கு ஆளும் பாஜகவும்,
குஜராத்: இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 93 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

குஜராத் சட்டப் பேரவைக்கான இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இங்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. எனவே, தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் அமைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்களும், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும் கடந்த சில வாரங்களாக குஜராத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.
மோடி, ராகுலுக்கு அனுமதி மறுப்பு: பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஆமதாபாத் நகரின் முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள போலீஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
முன்னதாக, குஜராத்தில் 20-க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடி பங்கேற்றார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பாஜக முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், வசுந்தரா ராஜே சிந்தியா, சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
ராகுல் காந்தி பல நாள்கள் குஜராத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டினர்.
93 தொகுதிகள், 851 வேட்பாளர்கள்: இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக வியாழக்கிழமை வடக்கு, மத்திய குஜராத் பகுதியில் உள்ள 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 69 பேர் பெண்கள். பாஜக சார்பில் 93 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 91 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இது தவிர பகுஜன் சமாஜ் 75, தேசியவாத காங்கிரஸ் 28, சிவசேனை 17, ஆம் ஆத்மி 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3, இந்திய கம்யூனிஸ்ட் 1, பிற கட்சிகள் 185 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சுயேச்சையாக 350 பேர் களத்தில் உள்ளனர். எனினும், பெரும்பான்மையான இடங்களில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வட்காம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 2.22 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1.15 கோடி பேர் ஆண்கள். 1.07 கோடி பேர் பெண்கள். 455 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
2-ஆம் கட்டத் தேர்தலின் முக்கியத்துவம்: இப்போது தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனவே, இந்தத் தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை முடிவு செய்வதில் 2-ஆம் கட்டத் தேர்தல் முக்கிய பங்கு வகிக்கும். குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக கடந்த 9-ஆம் தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளன.
6 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு: முதல்கட்டத் தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்ற 4 தொகுதிகளில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தலில் இங்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒத்திகையின்போது பதிவான வாக்குகளை அழிக்க தேர்தல் அலுவலர்கள் மறந்துவிட்டனர். எனவே, மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதில் கவனக் குறைவாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸின் இளைஞர்கள் கூட்டணி: குஜராத் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் பாஜக இத்தேர்தலை கெளரவப் பிரச்னையாகக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. குஜராத்தில் மோடிக்கென்று தனி செல்வாக்கும், வாக்கு வங்கியும் உள்ளது. எனினும், படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக அறியப்படும் அல்பேஷ் தாக்கூர், தலித் தலைவராக உருவெடுத்துள்ள ஜிக்னேஷ் மேவானி ஆகிய இளைஞர்களை காங்கிரஸுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ஒன்று திரட்டியுள்ளது பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில் இணைந்துவிட்டார். மாநில மக்கள்தொகையில் படேல் சமூகத்தினர் 12 சதவீதம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் பிரசார உத்தி: குஜராத்தில் தாங்கள் மேற்கொண்டுள்ள வளர்ச்சியை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ளவதாக பாஜக அறிவித்தாலும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின. முக்கியமாக, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாகவும், பாகிஸ்தான் தூதர் உள்ளிட்டோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் சந்தித்துப் பேசியதாக மோடி குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், தன்னை இழிவானவர் என்று விமர்சித்ததை தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டி மோடி ஆதரவு திரட்டினார்.
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு ராகுல் சென்று வழிபட்டதும் பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ராமர் கோயில் விவகாரத்தில் ராகுலின் நிலைப்பாடு என்ன? என்பது குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரது கேள்வியாக இருந்தது.
காங்கிரஸின் பதிலடி: அதே நேரத்தில், குஜராத்தின் எதிர்காலம் குறித்தும், பெரும்பான்மையான மக்களின் பிரச்னை குறித்தும் பாஜக கவலைப்படவில்லை; பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சரக்கு-சேவை வரி(ஜிஎஸ்டி), ரூபாய் நோட்டு வாபஸ் ஆகியவற்றால் குஜராத்தில் தொழில்கள் முடங்கிவிட்டன என்பது காங்கிரஸின் பதிலடி பிரசாரமாக அமைந்தது.
இத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தொடர்ந்து 5 முறை குஜராத்தில் ஆட்சி அமைத்து சாதனை படைக்கும். மாறாக காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது ராகுலின் தலைமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com