மன்மோகன் மீதான பிரதமரின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது

தேர்தல் ஆதாயத்துக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மீது தரந்தாழ்ந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி முன்வைத்தது வெட்கப்பட வேண்டிய செயல் என்றும், அதை ஏற்க முடியாது என்றும்
மன்மோகன் மீதான பிரதமரின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது

தேர்தல் ஆதாயத்துக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மீது தரந்தாழ்ந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி முன்வைத்தது வெட்கப்பட வேண்டிய செயல் என்றும், அதை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசு பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யும் வரை மாநில விவசாயிகள் மின் கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், எதிர்க்கட்சியினருக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். இத்தகைய மிரட்டல் பேச்சுகள் ஏற்புடையவை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகளை இவ்வாறு அச்சுறுத்துமானால், அதே மக்கள் அவர்களது அதிகாரத்தைப் பறிப்பார்கள்.
விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதாகவும், நிலுவைத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும் மாநில அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தத் தொகையும் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் வரை மின்கட்டணம் உள்பட எந்த விதமான வரியையும் விவசாயிகள் செலுத்தக் கூடாது. மொத்தத்தில் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் மத்திய, மாநில பாஜக அரசுகள் தோல்வியடைந்துவிட்டன.
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளது என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மணிசங்கர் அய்யர் வீட்டில் அமர்ந்து அதற்காக திட்டம் தீட்டியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வெட்கத்துக்குரிய செயல். இதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் மாண்பையே அவர் சிறுமைப்படுத்திவிட்டார் என்றார் சரத் பவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com