விவசாயிகள் பிரச்னை: எதிர்க்கட்சிகள் அமளியால் ஒடிஸா பேரவை ஒத்திவைப்பு

விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி ஒடிஸா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டதால் இரு முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி ஒடிஸா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டதால் இரு முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே, மகாநதி விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடமிடுவதாக ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு வைத்ததும் அவையில் கூச்சல், குழப்பத்துக்கு வித்திட்டது.
ஒடிஸா சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை கூடியவுடன் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், விவசாயிகள் நலனில் மாநில அரசு அக்கறை செலுத்துவதில்லை என்றும், அவர்களுக்குச் சேரவேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகை சுரண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
அரசு சார்பில் நடத்தப்படும் மண்டிகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கொடுக்கப்படுவதில்லை என்றும் புகார் எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு நடுவே, பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் எழுந்து, மகாநதி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், நதியின் குறுக்கே சத்தீஸ்கர் மாநிலம் அணை கட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், மீண்டும் அவை கூடியபோதும் இதே சூழலே நீடித்தது. இதனால் இரண்டாவது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்களின் விமானப் போக்குவரத்துக்கான செலவினங்கள் குறித்து அவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் பி.கே.அரூகா, கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் விமானப் போக்குவரத்துக்காக ரூ.26.55 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com