குஜராத் தேர்தலில் தலையீடா?: பாக். முன்னாள் அமைச்சர் மறுப்பு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக, பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத் கசூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக, பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத் கசூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தில்லியில் மணிசங்கர் அய்யர் வீட்டில், கடந்த 6-ஆம் தேதி இரவு நடைபெற்ற விருந்தில் நான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் அமைச்சர் கே.நட்வர் சிங், பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமது, பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர்கள், பிரபல பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
அந்த விருந்தில் கலந்து கொண்ட யாரும், குஜராத் மாநிலம் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. ஆனால், இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பிரதமர் மோடி தேவையின்றி எனது பெயரைப் பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பினால், இந்தியாவில் வாக்குகளைச் சேகரிக்க முடியுமா?என்பது வியப்பாக உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறும்போது, ஒருபோதும் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தியதில்லை.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்காக அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், சோஹைல் முகமதுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த விருந்தில், பாகிஸ்தான் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் யாரும் கலந்து கொண்டார்களா? என்று எனக்குத் தெரியாது.
பாஜகவிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். எனது அழைப்பை ஏற்று, அத்வானி பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களுடன் மட்டுமே நான் தொடர்பில் இருப்பது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் உருவாக்குவது தவறானதாகும்.
மணிசங்கர் அய்யரும், நானும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நாள்களில் இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக, அவர் மேற்கொண்டு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com