குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்!

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்!

அகமதாபாத்: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இம்மாதம் 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தற்பொழுது இரண்டாவது கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

குஜராத் சட்டப்பேரவை:

'ஏபிபி - சிஎஸ்டிஎஸ்' என்ற அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜக 91 தொகுதிகள் முதல் 99 தொகுதிகள் வரையில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 78 முதல் 86 வரையிலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்ததாக 'டைம்ஸ் நவ்' மற்றும் விஎம்ஆர் சேர்ந்து எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக 'ரிபப்ளிக்' மற்றும் ஜான் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 108 தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் 74 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹிமாச்சல பிரதேசம்:

68 தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக அமோக வெற்றியை தனதாக்கும் என கருத்து கணிப்பில் தெரிய வருகிறது. 'இந்தியா டுடே' இணைய தளம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக 47-55 தொகுதிகளையும், காங்கிரஸ் 13-20 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 தொகுதிகளை வென்றால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய இத்தகைய கருத்துக்கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com