நர்மதை-பார்வதி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ம.பி. அரசு ஒப்புதல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ. 7,456 கோடி செலவில் நர்மதை-பார்வதி நதி நீர் இணைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ. 7,456 கோடி செலவில் நர்மதை-பார்வதி நதி நீர் இணைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர், புதன்கிழமை கூறியதாவது:
நர்மதை கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ரூ.7,456 கோடி செலவில், நர்மதை-பார்வதி நதி நீர் இணைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மால்வா பிராந்தியத்தில், இந்தத் திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும். ஒவ்வொரு கட்டமாகப் பணிகள் முடிவடையும்போது, தலா 50,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தத்தில், 2 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 
இந்த நதி நீர் இணைப்புத் திட்டத்தால், ஷாஜாபூர், சீஹோர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 369 கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறுவர். இத்திட்டத்துக்காக, இந்திரா சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, குழாய்கள் வழியாக பாசனத்துக்கு திறந்துவிடப்படும்.
இதுதவிர, நர்மதை நதி பாய்ந்தோடும் 16 மாவட்டங்களில், 92 பயணிகள் தங்கும் விடுதி கட்டுவதற்காக, ரூ.41.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது 
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com