நிலக்கரி சுரங்க முறைகேடு தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வேன்: மது கோடா

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவுக்கு சனிக்கிழமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நிலக்கரி சுரங்க முறைகேடு தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வேன்: மது கோடா

ஜார்கண்ட்டின் ராஜ்ஹாரா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் வடக்குப் பகுதியை வினி இரும்பு மற்றும் ஸ்டீல் உத்யோக் என்கிற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதில், ஜார்கண்ட் மாநில முதல்வராக மது கோட இருந்தபோது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் இதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி பரத் பரஷார் தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்டோருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதில்,

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, ஜோஷி, குப்தா, பாஸு மற்றும் வினி இரும்பு மற்றும் ஸ்டீல் உத்யோக் என்கிற தனியார் நிறுவனம் உள்ளிட்டவைகளை ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் டிசம்பர் 13-ந் தேதி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, அவரின் நெருங்கிய நண்பர் விஜய் ஜோஷி, முன்னாள் நிலக்கரி சுரங்க செயலாளர் ஹெச்.சி.குப்தா, ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.கே.பாஸு உள்ளிட்டோருக்கு 3 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதித்து டிசம்பர் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

மது கோடா மற்றும் ஜோஷிக்கு ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. குப்தா மற்றும் பாஸுவுக்கு ரூ.1 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது. மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மது கோடா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தீர்ப்பு குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. இது எனக்கு எதிராக வேண்டுமென்ற செய்யப்பட்ட சூழ்ச்சி. இந்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளேன். இந்த வழக்கின் தீர்ப்பின் விவரம் குறித்து முழுவதும் அறிந்த பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். 

இந்த வழக்கின் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை மற்றும் எனது ஜாமீன் தொகை இரண்டுக்கும் செலுத்துவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. இதை நான் வேறு எங்கிருந்தாவது தான் ஏற்பாடு செய்ய வேண்டும். எனது சூழ்நிலை அப்படி உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com