கடற்படை விமானங்களின் எண்ணிக்கையை 10 ஆண்டுகளில் 500 ஆக உயர்த்த திட்டம்: சுனில் லான்பா

இந்திய கடற்படை விமானங்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 500-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை தலைமைத் தளபதி சுனில் லான்பா தெரிவித்தார்.
கடற்படை விமானங்களின் எண்ணிக்கையை 10 ஆண்டுகளில் 500 ஆக உயர்த்த திட்டம்: சுனில் லான்பா

இந்திய கடற்படை விமானங்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 500-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படை தலைமைத் தளபதி சுனில் லான்பா தெரிவித்தார்.
ஹைதராபாதில் உள்ள விமானப்படை அகாதெமியில் படிப்பை முடித்த வீரர்களின் அணிவகுப்பை சனிக்கிழமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடற்படையில் தற்போதுள்ள விமானப் பிரிவில் 238 விமானங்கள் உள்ளன. அவற்றில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடல்சார் ரோந்து விமானங்கள் உள்ளிட்டவை அடங்கும். அவற்றின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 500-ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியக் கடற்படையில் பணியாற்றி வந்த சபி கிரி என்ற வீரர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியதைத் தொடர்ந்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை மீண்டும் நேரடியாகப் பணியில் சேர்த்துக் கொள்ள இயலாது. மாறாக ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் ஒப்பந்தப் பணியாளராக வந்தால் அவரை ஏற்றுக் கொள்ள கடற்படை தயாராக உள்ளது.
இந்தியக் கடற்படை என்பது பாலின சமத்துவம் உள்ள சேவைப் பிரிவாகும். ஆனால், சபி கிரி விதிமுறைகளை மீறிவிட்டார். குறிப்பாக, அவர் ஓர் ஆணாகவே கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், அவர் செய்து கொண்டதைப் போல் செய்வதற்கு (பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல்) கடற்படை விதிமுறைகளில் இடமில்லை. அதனால்தான் விதிமுறைகளை மீறியதற்காக அவர் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டார்.
சபி கிரியை பணியில் சேர்த்துக் கொள்ள எங்களால் முடியாது என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியாளராக வரலாம் என்றும் கூறியுள்ளோம்.
கடற்படையில் பாலின அடிப்படையில் பாரபட்சம் பார்ப்பது இல்லை. நாங்கள் ஆண்களையும் பணியில் சேர்த்துக் கொள்கிறோம்; பெண்களையும் பணியில் சேர்த்துக் கொள்கிறோம். இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களும் கடுமையான பயிற்சிகளைப் பெறுகிறார்கள்; ஒரே விதிமுறைகளையே பின்பற்றுகின்றனர்.
கடற்படை, மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தைச் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது. 
தற்போது இந்தியக் கப்பல் கட்டும் தளங்களில் 34 கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் கட்டப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
இதனிடையே, ஹைதராபாத் விமானப்படை அகாதெமியில் 15 பெண் அதிகாரிகள் உள்பட 105 பேர் சனிக்கிழமை பயிற்சியை முடித்ததாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com