தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் காங்கிரஸின் செயல்பாட்டில் மாற்றமில்லை

தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும், காங்கிரஸ் செயல்படும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.

தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும், காங்கிரஸ் செயல்படும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தில்லியில் சனிக்கிழமை முறைப்படி பொறுப்பேற்றார். அவர் தனது தொடக்க உரையில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்துப் பேசினார். அதற்கு பதில் தரும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊழல் வழக்கில் தற்போது நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவுக்கு காங்கிரஸ் கட்சிதான் ஆதரவு அளித்தது. தலைமையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஊழல் கட்சியாக நீடிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதிலும் ஊழல் வழக்குகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுவே காங்கிரஸ் கட்சியின் சிந்தனை, செயல்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசும்.எனவே, புதிய தலைவரோ பழைய தலைவரோ யார் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் செயல்படும் விதம் முன்பு எப்படி இருந்ததோ அவ்வாறே நீடிக்கும். அக்கட்சியின் ஊழல் வழிமுறைகளும் தொடரும்.
தலைமை மாற்றம் பற்றி காங்கிரஸ் பேசும் அதேவேளையில், அக்கட்சி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.10 முதல் 14 லட்சம் கோடி அளவுக்கு எவ்வாறு ஊழல் நடைபெற்றது என்பதை இந்த நாடு பார்த்து வருகிறது.
சிலரால் கூறப்படுவதுபோல் காங்கிரஸ் என்பது புராதனமான சிந்தனை கிடையாது. மாறாக காங்கிரஸ் என்பது ஊழல் சிந்தனை நடைமுறையாகும். அதை நீதிமன்றம் இன்று (மது கோடா வழக்கு) நிரூபித்துள்ளது.
பாஜக தீயை மூட்டுவதாக ராகுல் கூறியுள்ளார். தெருக்களில் நடைபெறும் கலவரங்கள் காரணமாகவோ, சாலையில் நெருப்பை மூட்டியதாலோ, தேர்தல்களில் பாஜக வெற்றி பெறவில்லை. மாறாக, நரேந்திர மோடி தலைமையின் கீழ், "சீர்திருத்து-உருமாற்று-செயல்படு' என்ற மந்திரம் பலித்ததால்தான் தேர்தல்களில் வெற்றி கிடைத்தது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தோடு இன்றைய ஆட்சியை மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அப்போது நேரடி மானியத் திட்டம் இல்லாத காரணத்தால் ஏழைகளின் கைகளுக்கு பணம் சென்று சேரவில்லை. ஆனால், தற்போது இத்திட்டம் காரணமாக ஏழைகளுக்கு உரித்தான பணம் அவர்களைச் சென்றடைகிறது. வரிசையில் கடைசியில் நிற்கும் மனிதனுக்கும் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதாலும், எல்லா கிராமங்களையும் மின்சாரம் எட்டியிருப்பதாலுமே தேர்தல்களில் வெற்றி கிடைத்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com