திருமலையில் பரிந்துரை கடிதங்களுக்கான லட்டு, வடை விலை டிச. 25 முதல் உயர்த்த தேவஸ்தானம் நடவடிக்கை

திருமலையில் பரிந்துரை கடிதங்களுக்கான லட்டு மற்றும் வடைகளின் விலைகளை டிசம்பர் 25-ஆம் தேதி முதல் உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால் மானிய விலை லட்டு விலை உயர்த்தப்படவில்லை. 

திருமலையில் பரிந்துரை கடிதங்களுக்கான லட்டு மற்றும் வடைகளின் விலைகளை டிசம்பர் 25-ஆம் தேதி முதல் உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால் மானிய விலை லட்டு விலை உயர்த்தப்படவில்லை. 
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆன்மிக நிறுவனங்களின் உதவியுடன் சீனிவாச திருக்கல்யாண உற்சவங்களை நடத்தி வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு ஏழுமலையானின் லட்டு மற்றும் வடை பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
இந்நிகழ்ச்சியின்போது குறைந்த எண்ணிக்கையில் லட்டு, வடைகள் விற்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும், அதற்கு கூடுதல் விலை நிர்ணயித்தாலும் அதனை வழங்க பக்தர்கள் தயாராக உள்ளதாக ஆன்மிக அமைப்புகள் சார்பில் தேவஸ்தான நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. 
அதனால் தேவஸ்தானம் லட்டு, வடைகளின் விலையை உயர்த்தி அவர்கள் கேட்ட எண்ணிக்கையில் விநியோகிக்க முடிவு செய்தது. அதன்படி சீனிவாச திருக்கல்யாண உற்சவ லட்டு தலா ரூ. 200, வடை தலா ரூ. 100, சிறிய லட்டு தலா ரூ. 50, குட்டி லட்டு தலா ரூ. 7 என விலையை உயர்த்தியது. 
இதனை ஆதாரமாக வைத்து பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் லட்டு மற்றும் வடை பிரசாதங்களின் விலையையும் உயர்த்த தேவஸ்தானம் பரிசீலித்தது. இதன்மூலம் திருமலையில் லட்டு விநியோகத்தில் காணப்படும் முறைகேட்டை கட்டுப்படுத்தவும் முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே டிசம்பர் 25-ஆம் தேதி முதல் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் லட்டு மற்றும் வடைகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 
அதன்படி கல்யாண உற்சவ லட்டு ரூ. 200, வடை ரூ. 100, சிறிய லட்டு ரூ. 50 என விலை நிர்ணயித்துள்ளதாக தேவஸ்தான அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தரிசன டிக்கெட்டுகளுக்கு வழங்கும் லட்டு, தர்ம தரிசன பக்தர்கள் மற்றும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு வழங்கும் மானிய விலை லட்டு ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com